Monday, March 1, 2010

சோழர் கால நீர் மேலாண்மை | Water Management System in Chozha Period


"காவிரி செய்யும் பயணம் காலத்தே உழவர் வாழ்க்கை சிறக்கச் செய்யும்! மனிதர் நம் பயணமோ என்ன செய்யும்?" 

இருந்தாலும் ஆசை காரணமாக,சங்க காலம் முன்பிருந்தே இடைவிடாத பயணம் செய்பவளான காவிரியை வணங்கி நம் இரண்டாவது பயணத்தை ஆரம்பிக்கிறேன்
.

இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள கொடைகள் எண்ணிலடங்காதவை. நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் வெட்டவெளி(வானம்) என்ற ஐந்து பெரும்பிரிவுகளில் தமிழ்மரபு இவற்றைப் பிரிக்கிறது. இவற்றில் நீரின் முக்கியத்துவம் வார்த்தைகளில் அடக்கிவிடக்கூடிய ஒன்று அல்ல.  "நீரின்றி அமையாது உலகு" என்ற வாக்கியத்தின் மூலம் இதனை நாம் அறியலாம்.

நீர் நமக்கு வான் மழை, ஊற்றுக்களில் பிறப்பெடுக்கும் ஆறுகளினால் கிடைக்கப் பெறுகிறது. அப்படிக் கிடைக்கும் நீரை நாம் சரிவரக் கையாள்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில் 'இல்லை' என்பது தான்.

வடஇந்தியாவில் பாயும் பெரும்பாலான ஆறுகளுக்கு இமயமலை ஆதாரமாக இருக்கின்றது. இமயமலையின் தட்பவெப்ப நிலை குளிராகவே இருப்பதால் பனிக்கட்டி அடுக்குகள் இடைவிடாது உருவாகிக் கொண்டே இருப்பதால் அதிலிருந்துப் பிறப்பெடுக்கும் கங்கை போன்ற ஆறுகள் வற்றாத ஜீவ நதிகளாகவும் அளவில் மிகப்பெரியவையாகவும் உள்ளன.

ஆனால் தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆறுகள் அளவில் ஒப்பிடும்போது மிகச் சிறியவையாகவும் ஓடும் பரப்பளவு குறைவாகவும் உள்ளது. மேலும் தமிழ்நாடு வெப்பம் மிகுந்த பகுதியாகும். எனவே இருக்கின்ற நீர்வளத்தை எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகின்றது.

அது சோழர்கள் காலத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ள தோன்றியது. அதற்காகவே இந்த பயணம். பயணம் என்று சொல்வதை விட பயணங்கள் என்று சொல்லலாம். காரணம், இதற்காக மூன்று முறை பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் முதலிய ஐந்து மாவட்டங்கள், 800 கிலோமீட்டருக்கும் மேலான தொலைவு பயணம், ஒரு ஆறு,  அதன் கிளை ஆறுகள், பழமையான  அணைக்கட்டு ஒன்று,   இரண்டு ஏரிகள், முக்கியமான தீர்த்தம் ஒன்று என்று பலப்பல விசயங்கள் நாம் பார்க்க போகின்ற இடங்கள் நிறைய நிறைய வர இருக்கின்றன. இது என்னளவில் மிகவும் நீண்ட மற்றும் நெடிய பயணம் ஆகும்.




சோழர்களின் காலம் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை. செப்பேடுகள், கல்வெட்டுகள் மற்றும் சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்டக் காசுகள், கட்டப்பட்டக் கோயில்கள், பாடப்பட்ட பாடல்கள், மெய்க்கீர்த்திகள்   இவைகளின் துணை கொண்டு அவர்களின் வரலாற்றை தொல்பொருள்ஆய்வுத்துறை வல்லுனர்கள், கற்றுஆய்ந்த பெரியோர்கள் பலர் வெளிக் கொணர்ந்துள்ளனர். அவற்றின் துணை கொண்டு பார்க்கும்போது  சோழர்களின் அறிவுத் திறம், ஆட்சியமைப்பு முறை, கலைத் திறன், போர்த் திறன் மற்றும் கட்டிடக் கட்டமைப்புத் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

அவை எல்லாவற்றையும் பற்றித் தனித்தனியே அறிந்து கொள்ள முயற்சிசெய்தால் நமக்கு  இந்த ஒரு பிறவி காணாது.  ஏதோ ஓடும் ஆற்றில் ஒருதுளி நீர் பருக முயற்சி செய்யும் எறும்பை போல நானும் முயன்று பார்க்கிறேன். இது புள்ளிவிவரங்களையும், கல்வெட்டு செப்பேடுகளையும் பற்றிக் கூறக்கூடிய அளவிற்கு ஆழ்ந்த நுட்பம் மிக்கக் கட்டுரை அல்ல.  நானும் தொழில்முறையான வரலாற்று வாசிப்பாளன்  அல்ல. என்னால் இயன்றவரையில் நான் பெற்ற அனுபவத்தை உண்மையாக பல்வேறு தொகுப்புகளுடன் ஒப்பிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டி திருத்த வேண்டுகிறேன்.

சோழர்களின் கட்டுமானத் திறனை நினைக்கும்போது எல்லோருக்கும் நினைவிற்கு வருவது ராஜராஜேஸ்வரம், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் போன்ற கோயில்களே. அவற்றையும் தாண்டி மக்கள் நலனுக்காக அவர்கள்  வெட்டி சென்ற ஏரிகள், கட்டுவித்த அணைகள் ஆகியவைகள் கூட இன்றளவும் நிலைத்து பயனளித்து வருகின்றன.


அவற்றுள்  கரிகால் பெருவளத்தான், ஆதித்தசோழன், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய  மாபெரும் மன்னர்கள் ஆட்சியின்போது நிறைவேறி இன்றும் பயனளிக்கும்  நீர் மேலாண்மை பணிகளில் முக்கியமான சிலவற்றை நேரில் சென்று பார்வையிட போகிறோம்.

ஆறுகள் 

நாகரிகங்களின் தொட்டில் எனப்படுவது ஆறுகளின் கரைகளே.   ஆறுகளின் கரையில் உயிர்த்தெழுந்த நாகரிகங்கள் பலப்பல.

ஆதியில் காட்டில் மிருகத்தைப் போல சுற்றிக்கொண்டிருந்த மனிதன் ஆற்றுச்  சமவெளிக்கு வந்த பின்னரே படிப்படியாக மனிதன் என்ற  நிலையை அடைந்தான்.  விவசாயம் வளர்ந்தது. ஊர்கள் தோன்றின.

நைல் ஆற்றங்கரையோரம் வளர்ந்த எகிப்திய நாகரிகம், யூப்ரடிஸ் டைக்ரிஸ் நதிகளால் வளர்க்கப்பட்ட சுமேரிய நாகரிகம், மஞ்சள் நதியோரம் விளைந்த சீன நாகரிகம், சிந்துச் சமவெளி நாகரிகம், டைபர் ஆற்றின் மடியில் தவழ்ந்த ரோமானிய நாகரிகம், அவ்வளவு ஏன் இவை எல்லாவற்றிற்கும் தொன்மையாகக் கருதப்படும் கடல்கொண்ட லெமூரிய நாகரிகம் கூட பக்றுளியாற்றின் கரையில் வளர்ந்தது என்பர்,  இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.

காவிரி - சிறு குறிப்பு

அவ்விதம் தமிழகத்தை வளப்படுத்திய ஆறுகளில் குறிப்பிடத்தகுந்தவள் காவிரி.  காவிரியை தவிர்த்து நாம் சோழர் கால நீர் மேலாண்மை பணிகளை அறிய முடியாது.

"காகம் விரிக்க பாய்ந்தவள் காவிரி", "காடு செழிக்க விரிந்தவள் காவிரி", "கவேர முனிவரின் மகள் விஷ்ணுமாயை தான் காவிரி" என்று அவள் பெயருக்குப் பல காரணங்கள்.

காவிரி மூன்று நாடுகளை கடந்து சோழநாட்டிற்கு வருகிறாள்.

காவிரி வெளிப்படுவது குடகு நாட்டில்,  சிறு குழந்தையை போல குதித்து தவழ்ந்து வருவது மைசூர் மண்ணில், பிறகு விளையாடுவது கொங்கு நாட்டில். அதன் பிறகே தஞ்சை நோக்கி பயணம் செய்கிறாள்.

குடகு நாட்டில்:

காவிரியின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகில் தான்.  சைய மலை, பிரம்மகிரி, பிரம்ம கபாலம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மலையில் 30 அடி சதுர குளத்தில் இரண்டரை அடி ஆழமே உள்ள இடத்தில பொன்னி தோன்றுகிறாள்.

பாக மண்டலத்தில் அமைதியாக வெளிப்படும் காவிரியோடு  கனகா என்னும் ஆற்று நல்லாள் சேர்கிறாள்.  பிறகு கிழக்கு நோக்கிய பயணத்தில் அடையும் இடம் சித்திரபுரம், சற்றே வலப்புறம் திரும்பி செல்லும் ஊர் பிரேசர்பேட்டை, அங்கிருந்து கண்ணேகால் அடைகிறாள். பிறகு இருபது மைல் தொலைவில் அடுத்த நாடாகிய மைசூர் நாடு வருகிறது.

மைசூர் நாட்டில்:

மைசூரில் ஹாசன் ஜில்லாவில் வலஞ்சுழித்து ஓடி வருகிறாள். அடுத்து சுஞ்சின்கட்டே என்ற அருவியாக பாய்கிறாள்.  ஆழம் 60 முதல் 80 அடி வரை ஏற்படுத்துகிறாள். தொடரும் வடக்கு நோக்கிய பயணத்தில் திப்பூர் அருகே வடக்கிருந்து சேரும் ஆறு ஹேமாவதி, அதன் பிறகு பைரபூர் அருகே லக்ஷ்மணதீர்த்தம் சேர்கிறது.

இரு நதிகள் சேர்ந்து விட்டதால் அவளின் பிரம்மாண்டம் வெளிப்பட ஆரம்பிக்கிறது, அதன் முதல் வெளிப்பாடு "கிருஷ்ணராஜ சாகரம்" என அழைக்கப்படும் மிகப்பெரிய நீர்த்தேக்கம்.  அதன் மறுபகுதியில் இருப்பதே கண்ணம்பாடி அணைக்கட்டு.

பின் கிழக்கு திசை திரும்பும் காவிரி வடக்கு தெற்காக இரண்டாக பிரிகிறாள்.  கௌதம ஆசிரமம் அருகே காவிரியின் வடகிளையில் லோகபவானி காவிரியோடு ஒன்றாகிறாள். தென்கிளையாக செல்லும் காவிரி எட்டுக்கல் தூரம் கடந்து வடகிளையோடு சங்கமிக்கிறாள். பிறகு தென்கிழக்காக பாய்பவள் நரசிபூர் அருகே கப்பினியை தன்னோடு சேர்த்துக் கொள்கிறாள். அடுத்தும் கிழக்கே ஓடி, தென்புறம் திரும்பும் அவள் பெருமைப்படுத்தும் ஊர் தலக்காடு என்ற சரித்திர பிரசித்தி பெற்ற ஊர். அடுத்து காவிரியோடு ஸ்வர்ணாவதி கலந்து விடுகிறாள்.

அடுத்து வடகிழக்கு செல்லும் அவள் வடக்காகப் பாய்கிறாள். என்ன நினைக்கிறாளோ, இரண்டு பிரிவாக பிரிந்து அருவியாக பாய்கிறாள். மேற்கு கிளை ககனசுகி என அழைக்கபடுகிறது. கிழக்கு கிளை பார்சுகி எனப்படுகிறது. அதிலிருந்து வெளிப்படும் நீர்வீழ்ச்சியே சிவசமுத்திரம்.  3 மைல் ஓடி 250 அடி ஆழ அருவிகளை வெளிப்படுத்தும்  அவள் வடகிழக்காக ஒன்று கூடுகிறாள்.

தொடரும் அவள் கிழக்காக ஓடி குறுகிய மலை  குடைவில்  ஓடி வருகிறாள். வடக்கிருந்து வரும் இருவர் அவளோடு சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் பெயர் ஷிம்தா, அர்க்காகி.

அடுத்து மேகதாடு என்ற 12 அடி அகல மலை சரிவில் அவள் வரும்போது ஆடு  தாண்டக்கூடிய  அளவே அகலமாக இருப்பதால் "ஆடு தாண்டும் காவிரி" என அழைக்கபடுகிறாள்.

அங்கிருந்து அவள் கொங்கு நாட்டை நோக்கி வருகிறாள்..

கொங்கு நாட்டில்:

தமிழகத்தில் அவள் சந்திக்கும் முதல் நாடு கொங்கு நாடு, "ஹொகேனக்கல்" என்ற அருவியாக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். அவளை எதிர்கொண்டு வரவேற்பவர்கள் சின்னாறு, சனத்குமார நதி, தோப்பூராறு.  பிறகு திருச்செங்கோடு ஓமலூர் தாலுகாவில் வடக்கு தெற்காக பாய்கிறாள்.  அடுத்து சீதாமலை, பாலமலை இடையே  ஏற்படுத்தப்பட்டது தான் மேட்டூர் அணை.

மேட்டூரிலிருந்து விடைபெறும் அவள் ஈரோடு வருகிறாள்.  ஈரோடு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே காவிரி ரயில் நிலையம் தாண்டி 450   கஜம் நீளமுள்ள பாலம் அவள் மீது கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து தென்கிழக்காக செல்பவள் கோயம்புத்தூர் அருகே நொய்யல் ஆற்றுடன் கலக்கிறாள்.  நொய்யல் கிழக்கிருந்து அவளிடம் வருகிறது. அடுத்து வடக்கிருந்து திருமணிமுத்தாறு கலக்கிறது.

அங்கிருந்து நேர்கிழக்காக அவள் வருவது ***** \ சோழ நாடு \ ***** நோக்கி...

இனி சோழர்கள் நாட்டிற்கு செல்லலாம், வாருங்கள் நண்பர்களே!

சோழநாட்டிற்கு "பொன்னி நாடு" என்ற சிறப்புப்பெயர் உண்டு.   காரணம், பொன்னி என்று அழைக்கப்படும் காவிரி. அவள் வளைந்து நெளிந்து ஓடி தன் கரங்களால் "சோழநாடு சோறுடைத்து" என்ற வாக்கியத்தை எழுதி உயிர்கொடுக்கிறாள்.

பொன்னியின் செல்வன் படித்த யாரும் பொன்னியின் பெருமையை மறக்க முடியுமா?

- தொடரும் ஓட்டம் -

Wednesday, February 17, 2010

பொது


பலிகடா



அடுத்து நிற்கும் ஆடுகளை பார்த்து
ஒருக்களித்து சிரிக்கிறது
காளியின் முன் காவு கொடுக்கப்பட்ட
ஆட்டின் தலை;
நினைவு கலைந்து நிமிர்கிறேன்
வோட்டு சாவடியில் முதல் ஆளாக
நான்.



கிரிவலம் -  நிதர்சனம்



"இந்த ஈசான லிங்கம் எவ்வளவு தூரம் தான் இருக்கோ? சே!"
பக்கத்தில் நிற்கும் அம்மாவின் அங்கலாய்ப்பு;


" மச்சி! அந்த பிகர் சூப்பர், நல்ல தரிசனம்!"
இளையோரின் உற்சாகம்;

வரிசையில் நிற்பதில் ஏற்பட்ட தகராறில்
என் மேல் வந்து விழும் செருப்பு:


தன் மீது குறிபார்த்து வீசப்படும் கணக்கற்ற காசுகளினால்
முகம் சேதமாகி முழிக்கும் குபேரலிங்கனார்:


மலையை சுற்றும்போது சுற்றி நடக்கும் எதையும்
கவனிக்கக்கூடாது என்று கூறியபடி நண்பனை பார்க்கிறேன்;


கண்கள் மூடியபடி வாய் மந்திரம் உச்சரித்தபடி
மோன நிலையில் அவன்;


காலைக்குள் சென்னை செல்ல பஸ் கிடைக்கவேண்டும் என்று வேண்டியபடி


அண்ணாமலையார் முன் உள்ள நெருப்பில்
பாலிதீன்கவரோடு சூடனை விட்டெறிந்து


அவசரத்தில் வழுக்குகிறேன் அங்கிருந்து.

                                                                           - பாலா

Thursday, January 21, 2010

நந்தனாரின் மண்ணில் 2 நாட்கள் | Two Days at Nandanar's Land

"பயணம் வாழ்க்கையை பலப்படுத்தும்; நண்பர்கள் பலரைப்  பெற்று தரும்.  உங்களோடு இனி பயணித்து என் பார்வையை விசாலப்படுத்திக்   கொள்கிறேன்."

முதல் பயணம் நந்தனார் (திருநாளை போவார் என்று  63 நாயன்மார்களில் 
 ஒருவராக போற்றப்படுபவர்) வாழ்ந்து மறைந்த ஊர்களை நோக்கி.






எட்டு  மாதங்களுக்கு முன் ஒரு அரிதான புத்தகத்தை படிக்க நேர்ந்தது.  புத்தகத்தின் தலைப்பு கொலைக் களங்களின் வாக்குமூலம், இந்த வரலாற்று  இலக்கிய புலனாய்வு நூலை எழுதியவர் அருணன் அவர்கள்.   அதில் நந்தன், காத்தவராயன், மதுரை வீரன் மற்றும் முத்துப்பட்டன் ஆகியோர்களின் வாழ்க்கையை  ஆராய்ச்சிபூர்வமாக  ஆராய்ந்து நூலாக தொகுத்துள்ளார். அதில் நந்தனாரின் வரலாறு என்னை ஈர்த்தது.  அதன் விளைவே இந்த பயணம்.

நந்தனாரின் வரலாறு மூன்று முக்கிய தலங்களை சார்ந்து உள்ளது. மேல்காட்டு ஆதனூர் (தற்போதைய பெயர் - மேலாநல்லூர் ), திருப்புன்கூர் மற்றும் சிதம்பரம்.

இந்த கட்டுரையை பொறுத்தவரை மூன்று பகுதிகளாக நாம் பார்க்கலாம். முதலாவது,  அருணன்  அவர்கள்   எழுதிய புத்தகத்தில்
சொல்லப்பட்டிருக்கும்  கருத்துகள், இரண்டாவது, சம்பந்தப்பட்ட  ஊர்களில் நிலவி வரும் கருத்துகள்,  மூன்றாவதாக,  நேரில் பார்த்தவைகள்.

நந்தனாரை இனி நந்தன் என்றே விளிக்கலாம்.  நந்தனின் வாழ்வு 1200 ஆண்டுகளுக்கு முன் நிகழந்ததாக அனுமானிக்கப்படுகிறது. நந்தன் மாட்டின் தோலை உரிக்கும் வேலையை செய்யும் புலையர் குலத்தில் பிறந்தவர்.  அவரது ஊர் புன்புலைபாடி என்றே அழைக்கப்படுகிறது. அவருக்கு தில்லையில் குடிகொண்டிருக்கும் இறைவன் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது மாளாத காதல் நோயாக வாட்டியது.  தில்லை கோயிலோ தில்லை வாழ் அந்தணர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  பிறப்பால் உயர் சாதியினராக அவர்கள் கருதப்பட்டனர்.  நந்தனோ மிகவும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். சாதி வேறுபாடுகள் இந்த காலத்திலே மலிந்து இருக்கும்போது அந்த காலத்தில் கேட்க வேண்டுமா, என்ன?


                                                   

அவர் பிறந்த மேல்காட்டு ஆதனூர் சிதம்பரத்தில் இருந்து சுமார் 32 கி.மீ இருக்கலாம்.  உள்ளூர பயம் அவருக்கு ஏற்பட்டாலும் ஆசை அவரை விடவில்லை. "நாளை போகிறேன், நாளை போகிறேன்" என்று அவர் நாட்களை  தள்ளி போட்டு வந்ததாலே அவருக்கு "திருநாளைப் போவார்" என்ற காரணப்பெயர் ஏற்பட்டது.  முடிவில் அவர் புன்புலைபாடியை விட்டு கிளம்புகிறார்.


                                                    


போகும் வழியில் அவர் தரிசிக்கும் மற்றொரு ஸ்தலம் திருப்புன்கூர்.  அங்கு அவருக்காக நந்தி வழியை  விட்டு விலகி இறைவனை தரிசிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. அந்த கோயிலின் பின்னால் நந்தன் வெட்டிய குளம் உள்ளது.  அவர் குளம் வெட்ட விநாயகர் உதவியதாகவும் சொல்லப்படுகிறது.


                                                     

குளம் வெட்டிய விநாயகர் என்ற பெயரில் தனி சன்னதி உள்ளது.

ஆனால் ஆசிரியர் அருணன் அவர்கள்  இங்கு இன்னொன்றை சுட்டிக்காட்டுகிறார்.  அது சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வரும் ஒரு வரி "வடம் கொண்ட பொன் இதழி மணிமுடியார் திருவருளால் தடம் கொண்ட குலத்து அளவு சமைத்தற்பின் "

சேக்கிழார் மணிமுடியார் ஆகிய சிவனின் திருவருளால் தான் நந்தன் குளம் வெட்டியதாகக் கூறுகிறார்.  சிவன் தனது மகன் விநாயகரைத் துணைக்கு அழைத்ததாகக்  கூறவில்லை. கவனிக்க வேண்டிய வரி அது. பின்னால் தான் விநாயகர் கதை இணைக்கப்பட்டது.

கோபால கிருஷ்ண பாரதியாரின் "நந்தனார் சரித்திரம்" என்ற நாடகக் கீர்த்தனை.  அதில் பன்னிருவர் நந்தனாருக்கு உதவியதாகவும், அவர்கள் துணையோடு அந்தக் குளத்தை  அவர் வெட்டியதாகவும் குறிப்பு வருகிறது.  

 ஆனால் குளத்தை வெட்டிய பெருமையை முழுவதுமாக  நந்தனாருக்கு கொடுக்க விரும்பாத உயர்சாதியினர் விநாயகர் பெயரை துணைக்கு இழுத்துக்கொண்டனர். அவரின் பெயரில் ஒரு சன்னதியை ஏற்படுத்தி விட்டனர் என்பதே அருணன் அவர்களின் குறிப்பு. என்னுடைய எண்ணமும் அது தான்.

                                              

                                              

அந்த குளத்தின் பரப்பு பிரமிக்க வைக்கிறது.  நான் நினைக்கிறேன், நந்தன் வலுவான உடற்கட்டுடையவராகவும் உழைப்பாளியாகவும் இருந்திருக்க வேண்டும். உழைப்பையே உயிர்நாடியாக கொண்டவர் அல்லவா? 

என்ன தான் திருப்புன்கூரில் சிவலோகநாதரை சிறுதுளி தரிசனம் செய்தாலும் கோயில் என்றால் சிவனைப் பொறுத்தவரையில் 
சிதம்பரம் என்பது தானே?  இந்த நினைவு தான் நந்தனை வாட்டி எடுத்தது. 
விரும்பிய ஒன்று கிடைக்காதபோது மனம் படக்கூடியப்  பாடு எழுத்தில் வடிக்கக் கூடிய ஒன்றா, என்ன? தில்லைக்கு நாளை போவேன், நாளை போவேன் என்று கூறியே  நாட்களை கழித்து " திருநாளை போவார்"என்ற பட்டப்பெயர்
 வேறு. எல்லாம் சேர்ந்து ஒருவழியாக நந்தனை தில்லைக்கு கிளம்ப வைக்கின்றது.  உறுதியுடனும் இறுதி முடிவாகவும் கிளம்புகிறார் தில்லைக்கு.  நடக்க போகும் விபரீதம் அவரை எதிர்நோக்கிக்
காத்திருக்கிறது என்பதை அறியாமல்.

அநேகமாக ஆசிரியர் அருணன் கூறியது போல் முதல் ஆலய நுழைவுப் போராட்டம் என்பது நந்தனாரால் தான் தொடங்கி வைக்கப்பட்டது. 

                                              

சிதம்பரம் தில்லை மரங்களால்(Excoecaria agallocha) சூழப்பட்டிருப்பதால் "தில்லை" என்ற பெயர் பெற்றது.  சிதம்பரம் என்பதற்கான சரியான தமிழ் அர்த்தம் "அறிவுவெளி(space of knowledge)" என்று கூறலாம். இங்கு ஆடலரசனாக(நடராஜர்) இறைவன் காட்சி அளிக்கிறான்.  உலகத்தில் உள்ள எல்லா சிவன் கோயில்களில் உள்ள சிவகலைகள் அர்த்தஜாம வழிபாட்டின் போது இங்கு உள்ள பெருமானிடம் அடங்குவதாக சொல்ல கேட்டிருக்கிறேன்.   மேலும் பன்னிரு திருமுறைகளில் உள்ள எந்த ஒரு பாடல் தொகுப்பும் முடியும்போது"திருச்சிற்றம்பலம்" என்றே முடிவது
 திருச்சிற்றம்பல நாயகனை குறிக்கும் என்பதே என் அனுமானம்.  சரி, விசயத்தை விட்டுவிட்டு எங்கோ செல்கிறேன்.  ம், எதில் விட்டேன்?  நந்தன் சிதம்பரத்திற்கு கிளம்பியதில் தானே.

திரு தில்லைசபாநாயகர் கோயில் என்பது அண்மைக்காலம் வரை தில்லை மூவாயிரவர் கட்டுப்பாட்டில் இருந்தது.  அரசின் கட்டுபாட்டிற்கு வருவதற்கே இதனை காலம் ஆயிற்று. அப்படியானால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் 
அதுவும் ஒரு தாழ்ந்த குலம் என்று மனித பிறப்பில் வேறுபாடு பார்க்கப்பட்ட  அந்த காலத்தில் நந்தன் எவ்வளவு கடுமையான எதிர்ப்பை சந்தித்து இருக்க வேண்டும்?       

சேக்கிழார் கூற்றுப்படி பார்த்தோமானால் நந்தன் தன்னை இழிபிறப்பு என்று கருதியதால் அந்த ஆடல்அரசன் நடராஜரே நந்தன் கனவில் வந்து நீ தீயில் இறங்கி இழிநிலையான இந்த பிறப்பை நீக்கி என் திருமன்று வந்து என்னை அடைவாய் என்றாராம்.  அதே நேரத்தில் தில்லை மூவாயிரவர் கனவிலும் தோன்றி நந்தன் இறங்குவதற்காக தீக்குழி தயார் செய்ய சொன்னாராம்.  அதற்கான இடம் தில்லை கோயிலின் தென்புறத்து கோபுர மதில் அருகே தேர்ந்து எடுக்கப்பட்டதாம்.   இப்பொழுதும் நந்தனார் தீக்குள் இறங்கிய ஓமகுளம் கோயிலில் இருந்து தெற்குபக்கம் இருப்பது குறிப்பிட தகுந்தது. 

                                                
  
                                                

இங்கு ஆசிரியர் அருணன் முன்வைக்கும் கேள்வி ஒன்று தான், எல்லாம் வல்ல கடவுள் நந்தன் கனவில் தோன்றி என்ன சொல்லியிருக்க வேண்டும்? மனித பிறப்பில் உயர்பிறப்பு, இழிபிறப்பு என்று பேதம் கிடையாது. நீ என்னை தரிசிக்க தாராளமாக வா! உன்னை யாரும் தடுக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும் என்பது தான்.  நியாயமான கேள்வி தான்,

தீக்குள் இறங்கிய நந்தனார் தில்லை மூவாயிரவர்  சூழ கோயிலின் தென்புற கோபுரம் வழியே இறைவனை தரிசிக்க சென்றாராம். 


                                           

                                             


                                              

அதை உறுதிபடுத்தும் விதமாக தென்கோபுரத்திற்கு நேராக நந்தியம்
பெருமான் இருக்கிறார். ஆனால் அவரை அடுத்து இருக்கும் கோயில் சுவரில் ஏதோ அடைப்பு ஏற்படுத்தப்பட்டது போல் இருக்கிறது.  ஆசிரியர் அருணன் அதைப்பற்றியும் கூறியுள்ளார்.  தென்திசையில் நந்தன் தரிசனம் செய்ய வந்தது நிகழ்ந்த ஒன்று தான். அதை கூட வருங்கால தலைமுறை அறிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் தில்லை மூவாயிரவர் அந்த வழியை சுவர் எடுத்து அடைத்துவிட்டனர் என்பதே அது.  


                                    

ஆம், கூர்ந்து நோக்கினால் இன்னும் ஒன்று கூட தெரிய வரும், திருஞானசம்பந்தரும் இந்த வாயிலின் வழியே வழிபட சென்றாராம். அவருக்கு மட்டும் இக்கோபுரவாயிலில் சிலை வைக்கபட்டிருக்கிறது. இறைவன் சந்நிதியின் முன்கூட எவ்வளவு ஏற்றதாழ்வுகள்?

                                          


                                           


                                               

அதன்பிறகே சுவாமி சகஜானந்தர் அவர்கள் ஓமகுளம் அருகே தனியே ஒரு கோயில் எடுப்பித்தார்.  இந்த கோயிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் மகாத்மாகாந்தி அவர்கள்.

                                                  

இன்றும் அந்த கோயில் நிர்வாகம் அவரது தம்பி மகனிடம் இருக்கிறது.   நான் கோயிலுக்கு சென்று பார்த்த போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதி படர்ந்தது.  மாபெரும் சரித்திரம் அங்கு அமைதியாக வீற்றிருப்பது போல் இருந்தது. கோயில் அருகே குழந்தைகள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடிக் கொண்டு இருந்தது மிகவும் உற்சாகத்தை தந்தது.


                                                   

                                                   

                                                  


அவர்களின் கள்ளம்கபடம் இல்லா சிரிப்பு இறைவனையே நேரில் தரிசிப்பது என்பது இதுதானோ என்னவோ என்று தோன்றியது.  அவர்கள் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 

அவர்களில் ஒரு சிறுமி காலில் அணிந்து இருந்த கொலுசுகள் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வரும் "கார் இரும்பின் சரி செரிகைக் கரும்சிறார்" என்ற வரியை நினைவுப்படுத்தியது. நந்தன் ஊரில் வாழ்ந்த குழந்தைகள் இரும்பாலான சதங்கைகள் அணிந்து இருந்தனர், வெள்ளி, தங்கம் என்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு ஏழ்மை அவர்களை வாட்டியதாம்.  ஆசிரியர் அருணன் முகவரி கிடைத்திருந்தால் அவருடனே சென்று இருப்பேன்.  சரி, பரவாயில்லை, அவரின் புத்தகம் துணைக்கு இருக்கிறதே.


                                           

                                           


 வேறு ஒன்றும் இல்லை, தில்லை மூவாயிரவர்கள் நந்தன் கோயிலுக்குள் வருவதை தடுத்து இருக்க வேண்டும்.  அவர் எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும், அவரை எரித்து கொன்று விட்டு பழியை இறைவன் மீது 
போட்டு விட்டனர் என்பதே ஆசிரியர் முடிவு. அவ்வாறு தான் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

நான் இந்த கட்டுரையைப்  படிக்கும் நண்பர்களிடம் கேட்டுகொள்வது ஒன்று தான்,  முடிந்தால்  ஆசிரியர் அருணன் அவர்கள் எழுதிய "கொலைக் களங்களின்  வாக்கு மூலம்" என்ற நூலை தவறாமல் படியுங்கள்.  இங்கு நான் குறிப்பிட்டது அவரின் வழி அறிந்த நந்தனார் கதையின் ஒரு சிறு துணுக்கு மட்டுமே! காத்தவராயன், மதுரை வீரன், முத்துப்பட்டன்  போன்ற மனிதர்களாய் வாழ்ந்து தெய்வங்களை மறைந்தவர்களின் சரித்திரத்தை அவர் தொகுத்து வழங்கி இருப்பது அனைவரும் தவிர்க்காமல் படிக்க வேண்டிய தகவல்கள்.  அவரும், எழுத்தாளர் ராதா அவர்களும் அரிதான பொக்கிஷங்களை நமக்குத் தந்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு அளப்பரியது.  நான் எளிதாக புத்தகத்தின் உதவியால் சென்று வந்துவிட்டேன்.  இந்த கட்டுரையுடன் அந்த புத்தகத்தின் அட்டை முகப்பு, பின் பக்கங்களின் நிழற்படங்களை இணைத்திருக்கிறேன். பார்த்து நூலை வாங்கி படித்து பயன்பெறுங்கள்.


                                                     

                                                     


எந்த ஒரு கடந்தகால நிகழ்வைப் பொறுத்தவரையிலும் இப்படித் தான் நடந்திருக்கும் என்று ஒரு பிரிவினரும், இல்லை இப்படி நிகழவே இல்லை என்று மற்றொரு  பிரிவினரும் கூறுவதற்கு ஏராளமான காரணங்களைக்  கூறலாம். சான்றுகள் இல்லாத பட்சத்தில் எப்படி வேண்டுமென்றாலும் திரித்துக் கூறலாம்.  இது இரு சாராருக்குமே பொருந்தும்.

ஆகவே  நந்தனாரை பொறுத்தவரையில் அவரை எரித்துக் கொன்றார்களா இல்லையா என்று வாதம் செய்து நேரத்தைக் கழிப்பதை விட எனக்கு இரண்டு முக்கியமான கருத்துகள்  தோன்றுகின்றன.

முதலாவது, சிதம்பரம் கோயிலின் தென்கோபுரம் அருகே உள்ள அந்த அடைப்பு சுவர் நீக்கப்பட வேண்டும், நந்தனாரின் சிலையும் தெற்கு கோபுர வாயிலில் திருஞானசம்பந்தரோடு சேர்த்து நிறுவப்படவேண்டும்.

ஏன் என்றால் அந்த வாயில் வழியாக தான் நந்தனார் சபாநாயகனை தரிசிக்க வந்ததாக குறிப்பிடப்படுகிறது.

                                                    

இரண்டாவது நந்தனார் ஓமகுளம் கோயிலில் இருந்து ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை சபாநாயகர் கோயிலுக்குள் சென்று முதன்மையாக வைத்து இறைவனோடு சேர்த்து வைத்து வழிபட வேண்டும் என்பது,

இரண்டாவது  நிகழ்வதாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை. நிகழுமா?  என்பதும் தெரியவில்லை.  இதுவே நந்தனாருக்கு, அந்த நடராஜருக்கு, ஏன் தில்லை மூவாயிரவர்களுக்கும்  கூட செய்யும் பெரிய உபகாரமாக இருக்கும்.

நானும் ஆடல்வல்லானின் பக்தனே.  மலரிடுகை முதல் பூவருகங்கை ஈறாக அவரின் கரண  நிலைகளில் மெய்மறந்து அவற்றைப் பற்றி அறிய முயற்சிப்பவன்.  ஆனால் அவ்வளவு தூரம் ஆழமான அறிவை பெறவேண்டிய அளவு முயற்சியை இதுவரை எடுக்காதவனாக இருக்கின்றேன். அவரின் முன்னிலையில் எல்லோரும் சமம் என்பதில் நீங்காத நம்பிக்கை எனக்கு உண்டு.  மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மீதும் வெறுப்பு காட்டாதவன். எல்லோரும் எனக்கு ஒன்று தான். அதே நேரத்தில் உள்ளத்தில் உண்மை என்று தோன்றுவதை சொல்வதில் எப்போதும் எனக்கு தயக்கம் இருந்ததில்லை.

நான் படித்த புத்தகத்திலிருந்து, நான் நேரில் பார்த்தவற்றில் இருந்து, நானாக அனுமானம் செய்தவற்றில் இருந்து, எனக்குத் தோன்றியவற்றை கட்டுரையாக வடித்து இருக்கிறேன்.  ஏதும் சொற்குற்றம் இருந்தால் மன்னித்து விடுங்கள் சிறியேன் என்னை.   நண்பர்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.

                                                                                                                                -  பாலா

கட்டுரை தொகுப்பிற்கு ஆதாரமான நூல்கள்:-

ஆசிரியர் அருணனின் "கொலைக்களங்களின் வாக்குமூலங்கள்" 

பெரியபுராணம்

 திருத்தொண்டர் திருவந்தாதி

 திருத்தொண்டத்தொகை

உதவியோர்:-

சம்பந்தப்பட்ட கோயில்களின் நிர்வாகிகள்:-

சிதம்பரம் ஓமகுளம் நந்தனார் திருக்கோயில் -   தாமோதரன்,

திருப்புன்கூர் சௌந்தரநாயகி சமேத சிவலோகசுவாமி திருக்கோயில் -  நேருஜி

மேல்ஆதனூர் மகாதேவசுவாமி திருக்கோயில் -  சிவலோகம் பிள்ளை