Tuesday, September 3, 2019


அன்றில் அகவு - நட்பென புயலென வந்தவளுக்கு...
------------------
நீயே வந்தாய்!
நீயே இரவுபகல் பாராது
மழையென பேச்சை பொழிந்தாய்!
நீயே கவிதைகள் தந்தாய்!
நீயே பரிவுடன் கவனித்தாய்!
நீயே உனக்கான பொதுநலப்
பணிகளில் எனை சேர்த்தாய்!
நீயே நிறைய கற்றுக்கொடுத்தாய்!
நீயே எனை எழுத வைத்தாய்!
நீயே எனை வரைய வைத்தாய்!
நீயே என்னில் இருக்கும் முழுமனிதனை
எனக்கே முற்றிலும் அடையாளம் காட்டினாய்!
நீயே நான் சிறந்த நண்பன் என்றாய்!
பின் -
நீயே கோபப்பட்டாய்!
நீயே சமாதானமானாய்!
நீயே பேச்சை திடீரென நிறுத்தினாய்!
நீயே காரணம் சொல்லாமல்
விலக்கி வைத்தாய்!
நீயே அலட்சியப்படுத்தினாய்!
நீயே எனை குழம்ப வைத்தாய்!
காரணம் புரியாது
துன்பம் தாளாது விடாது
எனை புலம்ப வைத்தாய்!

அத்தனையும் தாண்டி
என்னில் மிஞ்சியிருக்கிறது
நீயே கள்ளமில்லா குழந்தை
என்ற எண்ணம் மட்டும்...

என் தாயை உன்னில்
உணர்ந்ததுண்டு! அதை
என் தாயிடம் நானும்
சொன்னதுண்டு!

ஏனிந்த கோபம் உனக்கு,
நான் செய்த தவறென்பது -
எதுவென்று புரியவில்லை எனக்கு
என்று தடுமாறுகிறதென் காலம்!

பெருமழையாய் பொழிந்தவள்
இடியாய் இறங்கி எரித்ததன் காரணம்
புரியாமல் கரிந்து சாம்பலாய் கிடக்கிறது
என் மனம்!

காரணம் சொல்ல மாட்டாயா பெண்ணே?
-------------
- பாலா

Sunday, August 18, 2019


அன்றில் அகவு - சில பைத்தியக்காரத்தனங்கள்
--------
இயற்கையும் நானும் மட்டுமே!
துணைக்கு கூட்டி வந்த வண்டி!
எலும்பை ஊடுருவும் குளிர்!
உள்ளிறங்கும் ஊசித்தூறல் மழை!
மேலிருந்து பார்க்கும் போது
சிறுபுள்ளிகளிட்ட கோலமாய் ஊர்!

பார்வைகோபுரத்தில் ஏறியவன் -
மலையெல்லாம் எதிரொலிக்க
மனங்கவர்ந்தவள் பெயரை
உரக்கக் கூறினேன்! மீண்டும் மீண்டும்... மீண்டும் மீண்டும் ஆவல் தீரும் வரை...
அவள் பெயர் மலை முகடுகளில் சென்று எதிரொலித்து மீண்டும் என்னை நோக்கி வந்தது!
கண்கள் மூடி உள்ளே அவளை உணர்ந்தவன்
மலைமூலிகைக் காற்றை நன்கு சுவாசித்து
நுரையீரலை நிரப்பினேன்!
மனமெல்லாம் குளிர் பரவியது!

வெகுநாள் ஆசை -
பெற்ற அன்னையிடம் அவள் பெயர்
சொல்லி மகிழ்ந்தவன்
இயற்கைதாயிடம் தன்னந்தனியே சொல்லி மகிழ வேண்டுமென்று.
நினைத்தது நிறைவேற்றிய மலைமாதாவுக்கு
நன்றி கூறிவிட்டு திரும்பி இறங்கினேன்
எதிரே என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது ஒரு ஜோடி...

ஏனோ எதிர்பாராமல் மனிதர்களைப் பார்த்து
கூச்சமும் மகிழ்ச்சியும் ஒருசேர என்னைத் தின்ன
குனிந்து கொண்டே விலகிச் சென்றவனிடம் "ஹலோ! நில்லுங்க! தப்பாக நினைக்க வேண்டாம்! அந்த பெயர்?" என்று கேட்டது வந்த ஜோடியில் ஆண்.
தலைநிமிர்ந்தபடி கம்பீரமாக "எனக்குப் பிடித்த பெண்ணின் பெயர்!"
என்று சொன்ன என்னிடம்...
"சுத்த பைத்தியக்காரத்தனம்!"  என்றது அந்த ஜோடியில் இருந்த பெண்!
கோபம் மேலிட "மன்னிக்கவும்! நீங்கள் யார் இதெல்லாம் சொல்ல?" என்றேன்!

"தவறா நினைக்க வேண்டாம் சகோ! நாங்க கூட இந்த பைத்தியக்காரத்தனத்தில் சிக்கினவங்க தான்! எங்களுக்கும் தோணுது! நான் இவன் பெயரையும் இவன் என் பெயரையும் இதே மாதிரி இங்கே சொல்லி சொல்லி சந்தோசப்படுவோம்! தேங்ஸ் பார் திஸ் ஐடியா! வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரிய அந்த பெயர் கொண்டவளுக்கும்!" என்று பதிலளித்தாள் அந்த சகோதரி!

"ஆமா! சில விசயங்கள் வெளியே இருந்து பார்க்கும் போது பைத்தியக்காரத்தனமாக தோணும்! அதில் மாட்டாத வரை! ஆனால் யாருக்கும் தொந்தரவு செய்யாத வரை அவற்றால் தவறுமில்லை!" என்ற அந்த ஜோடியிடம் விடைபெற்று சீறிப் பாய்ந்தது என்னுடன் என் இரும்பு யானை!
--------
- பாலா