அன்றில் அகவு - நட்பென புயலென வந்தவளுக்கு...
------------------
நீயே வந்தாய்!
நீயே இரவுபகல் பாராது
மழையென பேச்சை பொழிந்தாய்!
நீயே கவிதைகள் தந்தாய்!
நீயே பரிவுடன் கவனித்தாய்!
நீயே உனக்கான பொதுநலப்
பணிகளில் எனை சேர்த்தாய்!
நீயே நிறைய கற்றுக்கொடுத்தாய்!
நீயே எனை எழுத வைத்தாய்!
நீயே எனை வரைய வைத்தாய்!
நீயே என்னில் இருக்கும் முழுமனிதனை
எனக்கே முற்றிலும் அடையாளம் காட்டினாய்!
நீயே நான் சிறந்த நண்பன் என்றாய்!
பின் -
நீயே கோபப்பட்டாய்!
நீயே சமாதானமானாய்!
நீயே பேச்சை திடீரென நிறுத்தினாய்!
நீயே காரணம் சொல்லாமல்
விலக்கி வைத்தாய்!
நீயே அலட்சியப்படுத்தினாய்!
நீயே எனை குழம்ப வைத்தாய்!
காரணம் புரியாது
துன்பம் தாளாது விடாது
எனை புலம்ப வைத்தாய்!
அத்தனையும் தாண்டி
என்னில் மிஞ்சியிருக்கிறது
நீயே கள்ளமில்லா குழந்தை
என்ற எண்ணம் மட்டும்...
என் தாயை உன்னில்
உணர்ந்ததுண்டு! அதை
என் தாயிடம் நானும்
சொன்னதுண்டு!
ஏனிந்த கோபம் உனக்கு,
நான் செய்த தவறென்பது -
எதுவென்று புரியவில்லை எனக்கு
என்று தடுமாறுகிறதென் காலம்!
பெருமழையாய் பொழிந்தவள்
இடியாய் இறங்கி எரித்ததன் காரணம்
புரியாமல் கரிந்து சாம்பலாய் கிடக்கிறது
என் மனம்!
காரணம் சொல்ல மாட்டாயா பெண்ணே?
-------------
- பாலா