Thursday, January 21, 2010

நந்தனாரின் மண்ணில் 2 நாட்கள் | Two Days at Nandanar's Land

"பயணம் வாழ்க்கையை பலப்படுத்தும்; நண்பர்கள் பலரைப்  பெற்று தரும்.  உங்களோடு இனி பயணித்து என் பார்வையை விசாலப்படுத்திக்   கொள்கிறேன்."

முதல் பயணம் நந்தனார் (திருநாளை போவார் என்று  63 நாயன்மார்களில் 
 ஒருவராக போற்றப்படுபவர்) வாழ்ந்து மறைந்த ஊர்களை நோக்கி.






எட்டு  மாதங்களுக்கு முன் ஒரு அரிதான புத்தகத்தை படிக்க நேர்ந்தது.  புத்தகத்தின் தலைப்பு கொலைக் களங்களின் வாக்குமூலம், இந்த வரலாற்று  இலக்கிய புலனாய்வு நூலை எழுதியவர் அருணன் அவர்கள்.   அதில் நந்தன், காத்தவராயன், மதுரை வீரன் மற்றும் முத்துப்பட்டன் ஆகியோர்களின் வாழ்க்கையை  ஆராய்ச்சிபூர்வமாக  ஆராய்ந்து நூலாக தொகுத்துள்ளார். அதில் நந்தனாரின் வரலாறு என்னை ஈர்த்தது.  அதன் விளைவே இந்த பயணம்.

நந்தனாரின் வரலாறு மூன்று முக்கிய தலங்களை சார்ந்து உள்ளது. மேல்காட்டு ஆதனூர் (தற்போதைய பெயர் - மேலாநல்லூர் ), திருப்புன்கூர் மற்றும் சிதம்பரம்.

இந்த கட்டுரையை பொறுத்தவரை மூன்று பகுதிகளாக நாம் பார்க்கலாம். முதலாவது,  அருணன்  அவர்கள்   எழுதிய புத்தகத்தில்
சொல்லப்பட்டிருக்கும்  கருத்துகள், இரண்டாவது, சம்பந்தப்பட்ட  ஊர்களில் நிலவி வரும் கருத்துகள்,  மூன்றாவதாக,  நேரில் பார்த்தவைகள்.

நந்தனாரை இனி நந்தன் என்றே விளிக்கலாம்.  நந்தனின் வாழ்வு 1200 ஆண்டுகளுக்கு முன் நிகழந்ததாக அனுமானிக்கப்படுகிறது. நந்தன் மாட்டின் தோலை உரிக்கும் வேலையை செய்யும் புலையர் குலத்தில் பிறந்தவர்.  அவரது ஊர் புன்புலைபாடி என்றே அழைக்கப்படுகிறது. அவருக்கு தில்லையில் குடிகொண்டிருக்கும் இறைவன் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது மாளாத காதல் நோயாக வாட்டியது.  தில்லை கோயிலோ தில்லை வாழ் அந்தணர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  பிறப்பால் உயர் சாதியினராக அவர்கள் கருதப்பட்டனர்.  நந்தனோ மிகவும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். சாதி வேறுபாடுகள் இந்த காலத்திலே மலிந்து இருக்கும்போது அந்த காலத்தில் கேட்க வேண்டுமா, என்ன?


                                                   

அவர் பிறந்த மேல்காட்டு ஆதனூர் சிதம்பரத்தில் இருந்து சுமார் 32 கி.மீ இருக்கலாம்.  உள்ளூர பயம் அவருக்கு ஏற்பட்டாலும் ஆசை அவரை விடவில்லை. "நாளை போகிறேன், நாளை போகிறேன்" என்று அவர் நாட்களை  தள்ளி போட்டு வந்ததாலே அவருக்கு "திருநாளைப் போவார்" என்ற காரணப்பெயர் ஏற்பட்டது.  முடிவில் அவர் புன்புலைபாடியை விட்டு கிளம்புகிறார்.


                                                    


போகும் வழியில் அவர் தரிசிக்கும் மற்றொரு ஸ்தலம் திருப்புன்கூர்.  அங்கு அவருக்காக நந்தி வழியை  விட்டு விலகி இறைவனை தரிசிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. அந்த கோயிலின் பின்னால் நந்தன் வெட்டிய குளம் உள்ளது.  அவர் குளம் வெட்ட விநாயகர் உதவியதாகவும் சொல்லப்படுகிறது.


                                                     

குளம் வெட்டிய விநாயகர் என்ற பெயரில் தனி சன்னதி உள்ளது.

ஆனால் ஆசிரியர் அருணன் அவர்கள்  இங்கு இன்னொன்றை சுட்டிக்காட்டுகிறார்.  அது சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வரும் ஒரு வரி "வடம் கொண்ட பொன் இதழி மணிமுடியார் திருவருளால் தடம் கொண்ட குலத்து அளவு சமைத்தற்பின் "

சேக்கிழார் மணிமுடியார் ஆகிய சிவனின் திருவருளால் தான் நந்தன் குளம் வெட்டியதாகக் கூறுகிறார்.  சிவன் தனது மகன் விநாயகரைத் துணைக்கு அழைத்ததாகக்  கூறவில்லை. கவனிக்க வேண்டிய வரி அது. பின்னால் தான் விநாயகர் கதை இணைக்கப்பட்டது.

கோபால கிருஷ்ண பாரதியாரின் "நந்தனார் சரித்திரம்" என்ற நாடகக் கீர்த்தனை.  அதில் பன்னிருவர் நந்தனாருக்கு உதவியதாகவும், அவர்கள் துணையோடு அந்தக் குளத்தை  அவர் வெட்டியதாகவும் குறிப்பு வருகிறது.  

 ஆனால் குளத்தை வெட்டிய பெருமையை முழுவதுமாக  நந்தனாருக்கு கொடுக்க விரும்பாத உயர்சாதியினர் விநாயகர் பெயரை துணைக்கு இழுத்துக்கொண்டனர். அவரின் பெயரில் ஒரு சன்னதியை ஏற்படுத்தி விட்டனர் என்பதே அருணன் அவர்களின் குறிப்பு. என்னுடைய எண்ணமும் அது தான்.

                                              

                                              

அந்த குளத்தின் பரப்பு பிரமிக்க வைக்கிறது.  நான் நினைக்கிறேன், நந்தன் வலுவான உடற்கட்டுடையவராகவும் உழைப்பாளியாகவும் இருந்திருக்க வேண்டும். உழைப்பையே உயிர்நாடியாக கொண்டவர் அல்லவா? 

என்ன தான் திருப்புன்கூரில் சிவலோகநாதரை சிறுதுளி தரிசனம் செய்தாலும் கோயில் என்றால் சிவனைப் பொறுத்தவரையில் 
சிதம்பரம் என்பது தானே?  இந்த நினைவு தான் நந்தனை வாட்டி எடுத்தது. 
விரும்பிய ஒன்று கிடைக்காதபோது மனம் படக்கூடியப்  பாடு எழுத்தில் வடிக்கக் கூடிய ஒன்றா, என்ன? தில்லைக்கு நாளை போவேன், நாளை போவேன் என்று கூறியே  நாட்களை கழித்து " திருநாளை போவார்"என்ற பட்டப்பெயர்
 வேறு. எல்லாம் சேர்ந்து ஒருவழியாக நந்தனை தில்லைக்கு கிளம்ப வைக்கின்றது.  உறுதியுடனும் இறுதி முடிவாகவும் கிளம்புகிறார் தில்லைக்கு.  நடக்க போகும் விபரீதம் அவரை எதிர்நோக்கிக்
காத்திருக்கிறது என்பதை அறியாமல்.

அநேகமாக ஆசிரியர் அருணன் கூறியது போல் முதல் ஆலய நுழைவுப் போராட்டம் என்பது நந்தனாரால் தான் தொடங்கி வைக்கப்பட்டது. 

                                              

சிதம்பரம் தில்லை மரங்களால்(Excoecaria agallocha) சூழப்பட்டிருப்பதால் "தில்லை" என்ற பெயர் பெற்றது.  சிதம்பரம் என்பதற்கான சரியான தமிழ் அர்த்தம் "அறிவுவெளி(space of knowledge)" என்று கூறலாம். இங்கு ஆடலரசனாக(நடராஜர்) இறைவன் காட்சி அளிக்கிறான்.  உலகத்தில் உள்ள எல்லா சிவன் கோயில்களில் உள்ள சிவகலைகள் அர்த்தஜாம வழிபாட்டின் போது இங்கு உள்ள பெருமானிடம் அடங்குவதாக சொல்ல கேட்டிருக்கிறேன்.   மேலும் பன்னிரு திருமுறைகளில் உள்ள எந்த ஒரு பாடல் தொகுப்பும் முடியும்போது"திருச்சிற்றம்பலம்" என்றே முடிவது
 திருச்சிற்றம்பல நாயகனை குறிக்கும் என்பதே என் அனுமானம்.  சரி, விசயத்தை விட்டுவிட்டு எங்கோ செல்கிறேன்.  ம், எதில் விட்டேன்?  நந்தன் சிதம்பரத்திற்கு கிளம்பியதில் தானே.

திரு தில்லைசபாநாயகர் கோயில் என்பது அண்மைக்காலம் வரை தில்லை மூவாயிரவர் கட்டுப்பாட்டில் இருந்தது.  அரசின் கட்டுபாட்டிற்கு வருவதற்கே இதனை காலம் ஆயிற்று. அப்படியானால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் 
அதுவும் ஒரு தாழ்ந்த குலம் என்று மனித பிறப்பில் வேறுபாடு பார்க்கப்பட்ட  அந்த காலத்தில் நந்தன் எவ்வளவு கடுமையான எதிர்ப்பை சந்தித்து இருக்க வேண்டும்?       

சேக்கிழார் கூற்றுப்படி பார்த்தோமானால் நந்தன் தன்னை இழிபிறப்பு என்று கருதியதால் அந்த ஆடல்அரசன் நடராஜரே நந்தன் கனவில் வந்து நீ தீயில் இறங்கி இழிநிலையான இந்த பிறப்பை நீக்கி என் திருமன்று வந்து என்னை அடைவாய் என்றாராம்.  அதே நேரத்தில் தில்லை மூவாயிரவர் கனவிலும் தோன்றி நந்தன் இறங்குவதற்காக தீக்குழி தயார் செய்ய சொன்னாராம்.  அதற்கான இடம் தில்லை கோயிலின் தென்புறத்து கோபுர மதில் அருகே தேர்ந்து எடுக்கப்பட்டதாம்.   இப்பொழுதும் நந்தனார் தீக்குள் இறங்கிய ஓமகுளம் கோயிலில் இருந்து தெற்குபக்கம் இருப்பது குறிப்பிட தகுந்தது. 

                                                
  
                                                

இங்கு ஆசிரியர் அருணன் முன்வைக்கும் கேள்வி ஒன்று தான், எல்லாம் வல்ல கடவுள் நந்தன் கனவில் தோன்றி என்ன சொல்லியிருக்க வேண்டும்? மனித பிறப்பில் உயர்பிறப்பு, இழிபிறப்பு என்று பேதம் கிடையாது. நீ என்னை தரிசிக்க தாராளமாக வா! உன்னை யாரும் தடுக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும் என்பது தான்.  நியாயமான கேள்வி தான்,

தீக்குள் இறங்கிய நந்தனார் தில்லை மூவாயிரவர்  சூழ கோயிலின் தென்புற கோபுரம் வழியே இறைவனை தரிசிக்க சென்றாராம். 


                                           

                                             


                                              

அதை உறுதிபடுத்தும் விதமாக தென்கோபுரத்திற்கு நேராக நந்தியம்
பெருமான் இருக்கிறார். ஆனால் அவரை அடுத்து இருக்கும் கோயில் சுவரில் ஏதோ அடைப்பு ஏற்படுத்தப்பட்டது போல் இருக்கிறது.  ஆசிரியர் அருணன் அதைப்பற்றியும் கூறியுள்ளார்.  தென்திசையில் நந்தன் தரிசனம் செய்ய வந்தது நிகழ்ந்த ஒன்று தான். அதை கூட வருங்கால தலைமுறை அறிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் தில்லை மூவாயிரவர் அந்த வழியை சுவர் எடுத்து அடைத்துவிட்டனர் என்பதே அது.  


                                    

ஆம், கூர்ந்து நோக்கினால் இன்னும் ஒன்று கூட தெரிய வரும், திருஞானசம்பந்தரும் இந்த வாயிலின் வழியே வழிபட சென்றாராம். அவருக்கு மட்டும் இக்கோபுரவாயிலில் சிலை வைக்கபட்டிருக்கிறது. இறைவன் சந்நிதியின் முன்கூட எவ்வளவு ஏற்றதாழ்வுகள்?

                                          


                                           


                                               

அதன்பிறகே சுவாமி சகஜானந்தர் அவர்கள் ஓமகுளம் அருகே தனியே ஒரு கோயில் எடுப்பித்தார்.  இந்த கோயிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் மகாத்மாகாந்தி அவர்கள்.

                                                  

இன்றும் அந்த கோயில் நிர்வாகம் அவரது தம்பி மகனிடம் இருக்கிறது.   நான் கோயிலுக்கு சென்று பார்த்த போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதி படர்ந்தது.  மாபெரும் சரித்திரம் அங்கு அமைதியாக வீற்றிருப்பது போல் இருந்தது. கோயில் அருகே குழந்தைகள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடிக் கொண்டு இருந்தது மிகவும் உற்சாகத்தை தந்தது.


                                                   

                                                   

                                                  


அவர்களின் கள்ளம்கபடம் இல்லா சிரிப்பு இறைவனையே நேரில் தரிசிப்பது என்பது இதுதானோ என்னவோ என்று தோன்றியது.  அவர்கள் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 

அவர்களில் ஒரு சிறுமி காலில் அணிந்து இருந்த கொலுசுகள் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வரும் "கார் இரும்பின் சரி செரிகைக் கரும்சிறார்" என்ற வரியை நினைவுப்படுத்தியது. நந்தன் ஊரில் வாழ்ந்த குழந்தைகள் இரும்பாலான சதங்கைகள் அணிந்து இருந்தனர், வெள்ளி, தங்கம் என்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு ஏழ்மை அவர்களை வாட்டியதாம்.  ஆசிரியர் அருணன் முகவரி கிடைத்திருந்தால் அவருடனே சென்று இருப்பேன்.  சரி, பரவாயில்லை, அவரின் புத்தகம் துணைக்கு இருக்கிறதே.


                                           

                                           


 வேறு ஒன்றும் இல்லை, தில்லை மூவாயிரவர்கள் நந்தன் கோயிலுக்குள் வருவதை தடுத்து இருக்க வேண்டும்.  அவர் எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும், அவரை எரித்து கொன்று விட்டு பழியை இறைவன் மீது 
போட்டு விட்டனர் என்பதே ஆசிரியர் முடிவு. அவ்வாறு தான் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

நான் இந்த கட்டுரையைப்  படிக்கும் நண்பர்களிடம் கேட்டுகொள்வது ஒன்று தான்,  முடிந்தால்  ஆசிரியர் அருணன் அவர்கள் எழுதிய "கொலைக் களங்களின்  வாக்கு மூலம்" என்ற நூலை தவறாமல் படியுங்கள்.  இங்கு நான் குறிப்பிட்டது அவரின் வழி அறிந்த நந்தனார் கதையின் ஒரு சிறு துணுக்கு மட்டுமே! காத்தவராயன், மதுரை வீரன், முத்துப்பட்டன்  போன்ற மனிதர்களாய் வாழ்ந்து தெய்வங்களை மறைந்தவர்களின் சரித்திரத்தை அவர் தொகுத்து வழங்கி இருப்பது அனைவரும் தவிர்க்காமல் படிக்க வேண்டிய தகவல்கள்.  அவரும், எழுத்தாளர் ராதா அவர்களும் அரிதான பொக்கிஷங்களை நமக்குத் தந்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு அளப்பரியது.  நான் எளிதாக புத்தகத்தின் உதவியால் சென்று வந்துவிட்டேன்.  இந்த கட்டுரையுடன் அந்த புத்தகத்தின் அட்டை முகப்பு, பின் பக்கங்களின் நிழற்படங்களை இணைத்திருக்கிறேன். பார்த்து நூலை வாங்கி படித்து பயன்பெறுங்கள்.


                                                     

                                                     


எந்த ஒரு கடந்தகால நிகழ்வைப் பொறுத்தவரையிலும் இப்படித் தான் நடந்திருக்கும் என்று ஒரு பிரிவினரும், இல்லை இப்படி நிகழவே இல்லை என்று மற்றொரு  பிரிவினரும் கூறுவதற்கு ஏராளமான காரணங்களைக்  கூறலாம். சான்றுகள் இல்லாத பட்சத்தில் எப்படி வேண்டுமென்றாலும் திரித்துக் கூறலாம்.  இது இரு சாராருக்குமே பொருந்தும்.

ஆகவே  நந்தனாரை பொறுத்தவரையில் அவரை எரித்துக் கொன்றார்களா இல்லையா என்று வாதம் செய்து நேரத்தைக் கழிப்பதை விட எனக்கு இரண்டு முக்கியமான கருத்துகள்  தோன்றுகின்றன.

முதலாவது, சிதம்பரம் கோயிலின் தென்கோபுரம் அருகே உள்ள அந்த அடைப்பு சுவர் நீக்கப்பட வேண்டும், நந்தனாரின் சிலையும் தெற்கு கோபுர வாயிலில் திருஞானசம்பந்தரோடு சேர்த்து நிறுவப்படவேண்டும்.

ஏன் என்றால் அந்த வாயில் வழியாக தான் நந்தனார் சபாநாயகனை தரிசிக்க வந்ததாக குறிப்பிடப்படுகிறது.

                                                    

இரண்டாவது நந்தனார் ஓமகுளம் கோயிலில் இருந்து ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை சபாநாயகர் கோயிலுக்குள் சென்று முதன்மையாக வைத்து இறைவனோடு சேர்த்து வைத்து வழிபட வேண்டும் என்பது,

இரண்டாவது  நிகழ்வதாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை. நிகழுமா?  என்பதும் தெரியவில்லை.  இதுவே நந்தனாருக்கு, அந்த நடராஜருக்கு, ஏன் தில்லை மூவாயிரவர்களுக்கும்  கூட செய்யும் பெரிய உபகாரமாக இருக்கும்.

நானும் ஆடல்வல்லானின் பக்தனே.  மலரிடுகை முதல் பூவருகங்கை ஈறாக அவரின் கரண  நிலைகளில் மெய்மறந்து அவற்றைப் பற்றி அறிய முயற்சிப்பவன்.  ஆனால் அவ்வளவு தூரம் ஆழமான அறிவை பெறவேண்டிய அளவு முயற்சியை இதுவரை எடுக்காதவனாக இருக்கின்றேன். அவரின் முன்னிலையில் எல்லோரும் சமம் என்பதில் நீங்காத நம்பிக்கை எனக்கு உண்டு.  மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மீதும் வெறுப்பு காட்டாதவன். எல்லோரும் எனக்கு ஒன்று தான். அதே நேரத்தில் உள்ளத்தில் உண்மை என்று தோன்றுவதை சொல்வதில் எப்போதும் எனக்கு தயக்கம் இருந்ததில்லை.

நான் படித்த புத்தகத்திலிருந்து, நான் நேரில் பார்த்தவற்றில் இருந்து, நானாக அனுமானம் செய்தவற்றில் இருந்து, எனக்குத் தோன்றியவற்றை கட்டுரையாக வடித்து இருக்கிறேன்.  ஏதும் சொற்குற்றம் இருந்தால் மன்னித்து விடுங்கள் சிறியேன் என்னை.   நண்பர்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.

                                                                                                                                -  பாலா

கட்டுரை தொகுப்பிற்கு ஆதாரமான நூல்கள்:-

ஆசிரியர் அருணனின் "கொலைக்களங்களின் வாக்குமூலங்கள்" 

பெரியபுராணம்

 திருத்தொண்டர் திருவந்தாதி

 திருத்தொண்டத்தொகை

உதவியோர்:-

சம்பந்தப்பட்ட கோயில்களின் நிர்வாகிகள்:-

சிதம்பரம் ஓமகுளம் நந்தனார் திருக்கோயில் -   தாமோதரன்,

திருப்புன்கூர் சௌந்தரநாயகி சமேத சிவலோகசுவாமி திருக்கோயில் -  நேருஜி

மேல்ஆதனூர் மகாதேவசுவாமி திருக்கோயில் -  சிவலோகம் பிள்ளை











7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Good Work Bala, I wish you explore more and more wisdom.

    ReplyDelete
  3. Thank you for your encouragement sir. Your wishes boosting me to post on various topics in the coming days with full enthusiasm.

    ReplyDelete
  4. "எந்த ஒரு கடந்தகால நிகழ்வைப் பொறுத்தவரையிலும் இப்படித் தான் நடந்திருக்கும் என்று ஒரு பிரிவினரும், இல்லை இப்படி நிகழவே இல்லை என்று மற்றொரு பிரிவினரும் கூறுவதற்கு ஏராளமான காரணங்களைக் கூறலாம். சான்றுகள் இல்லாத பட்சத்தில் எப்படி வேண்டுமென்றாலும் திரித்துக் கூறலாம். இது இரு சாராருக்குமே பொருந்தும்."
    நாலே வார்த்தைகள் என்றாலும் 'நச்'சென்று கூறியுள்ளீர்கள்.இக்கட்டுரை எனக்கு மெய்ஞானத்தை அளித்தது.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. Dear Bala,
    "எந்த ஒரு கடந்தகால நிகழ்வைப் பொறுத்தவரையிலும் இப்படித் தான் நடந்திருக்கும் என்று ஒரு பிரிவினரும், இல்லை இப்படி நிகழவே இல்லை என்று மற்றொரு பிரிவினரும் கூறுவதற்கு ஏராளமான காரணங்களைக் கூறலாம். சான்றுகள் இல்லாத பட்சத்தில் எப்படி வேண்டுமென்றாலும் திரித்துக் கூறலாம். இது இரு சாராருக்குமே பொருந்தும்."
    Even thoug you had stated the above statement, but your thoughts are onesided and second the the anti-brahminism propaganda of the author of the book - கொலைக் களங்களின் வாக்குமூலம், Thiru Arunan. Even I dont say that Thillai Vaal Andhanargal are so perfect but we people who doesn't even know the names of great grand fathers has no right or capacity to coment on the happenings 1200 years back. May be we can assume based on our likings.
    All the very best to you travellog.

    ReplyDelete
  6. நாயன்மார்களில் ஒருவரான நந்தனாரை எரித்துக் கொன்றுவிட முடியுமா? நல்ல கற்பனை. இதன் மூலம் இறைவனை அல்லவா அவமதிக்கிறீர்?!

    ReplyDelete
  7. நந்தனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்!அவரை எப்படி எரித்துக் கொன்று விட முடியும்? அப்படி இருக்கும் பட்சத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்! எப்படி செம்மையே திருநாளைப் போவாற்க்கும் அடியேன் எனப் பாடி இருப்பார்? ஒருவேளை இதுவும் இடைச்சொருகல்‌ என்று சொல்வீர்களா? தெற்கு கோபுரத்தில் நந்தனார் சிற்பம் வேண்டும்,அருத்ரா தரிசனம் போது முதல் மரியாதை எல்லாம் சரி.ஆனால் ஆடல் வல்லானின் பக்தன் எனக் கூறும் நீர் எப்படி ஒரு நாயன்மாரை கொன்று இருக்க முடியும் என்பதை நம்புகிறீர்? இறைவனை விட உயர்ந்தவர்கள் நாயன்மார்கள்.தயவுசெய்து அவர்களைக் கொச்சைப் படுத்த வேண்டாம்!

    ReplyDelete