Tuesday, December 31, 2013

மண் செழிக்கப் பிறந்தவருடன் ஒரு மாலை வேளை சந்திப்பு - அய்யா திரு கோ. நம்மாழ்வார் அவர்களின் நேர்காணல் தொகுப்பு



இறுதி மூச்சு இருக்கும் வரை இடையறாது இயங்கிய "இயற்கை போராளி" நம் அய்யா நம்மாழ்வார் அவர்கள் மறைவு தாங்கொணாத்  துன்பத்திற்கு  உரியது. அய்யா விட்டுச் சென்ற சுவடுகளில் இடைவிடாது  பயணிப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

ஆனால் இனி யார் நம் அறியாமை இருள் அகற்றுவார் அவர் போல?  உழவர்களின் தாயாக விளங்கியவர் மறைந்து விட்டாரே?  அந்த 75 வயது இளைஞரின் சுறுசுறுப்பை இனி காண முடியாதே!



யோசித்துப் பார்க்கையில் நிலாச்சோறு மாத இதழுக்காக அவரது நேர்காணலுக்காக சென்ற பொழுது பார்த்த அவரது உற்சாகம் பொருந்திய முகமும், தனது மீசையை நீவிக்கொண்டே அவர் முன் நின்று சிறியவன் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கம்பீரமும், கணீர் கணீர் என ஒலித்த சங்கநாதம் போன்ற அவரது குரலும், சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல தனது பண்ணையிலுள்ள செடிகொடிகளை அவர் கவனித்த விதமும், புகைப்படம் பிடிக்க எத்தனித்தபோது விடுவிடுவென்று சென்று சிறுவனைப் போலே நாற்காலியில் இருந்த துண்டை எடுத்து தனது தலையில் கட்டிக்கொண்டு  "இப்பொழுது எடு புகைப்படம்!" என்று கூறியது என 2012ல் நடந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து மனதில் தோன்றுகின்றன.



குறித்து வைத்திருந்த கேள்விகள் தாண்டி அய்யாவுடன் பேச பேச கிட்டத்தட்ட இருபத்திமூன்று கேள்விகளும், பதில்களும் என நேர்காணல் நிகழ்ந்தது.
அய்யாவோடு நிகழ்த்திய அந்த நேர்காணலை கனத்த இதயத்துடன் நண்பர்களின் மேலான பார்வைக்கு வைக்கின்றேன்!

அய்யா அறிவுறுத்திய கருத்துக்களின் வீச்சு படிப்போர் உள்ளத்தில் கலந்து உலகத்திற்கு உறுதி ஊட்டுவதாக!


மண் செழிக்கப் பிறந்தவருடன் ஒரு மாலை வேளை  சந்திப்பு


இடம் : வானகம், (பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவு பாதுகாப்புக்கான நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்), கடவூர் - 621 311

நாள் : 27-08-2012

நேரம் : மாலை 3.30 முதல் 4.45 மணி வரை 

நேர்காணல் & நிழற்படம் : பாலமுருகன் திரவியம் 


வானகம் பொழிந்து கானகம் செழிக்கவும், மருதம் சீர்பெற்று மக்கள்  வாழ்வு பொலிவு பெறவும் இடையறாது ஆழ்வினையாற்றி வரும் அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுடன் வானகத்தில் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது.

சொல் ஏர் கொண்டு நம் உள்ளக் கழனி உழவு செய்யும் அவரின் வார்த்தைகள் கீழே உங்கள் பார்வைக்கு:-

அய்யா! வணக்கம். உங்களை சந்திப்பதில் நிலாச்சோறு பெருமகிழ்ச்சி கொள்கிறது. பொதுவாக மக்களின் உணவுமுறை பழங்காலத்தில் எவ்வாறு இருந்தது? தற்போதைய சூழலில் அதில் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது?

கனிவான வணக்கம், நல்ல கேள்வி, உணவு பற்றி சொல்ல வேண்டுமென்றால், 2000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் உண்ண எண்ணிலடங்கா வகையில் பயிர்கள் இருந்திருக்கின்றன.  தற்போதைய சூழலில் 20 வகையான உணவுப் பயிர்களே பயன்பாட்டில் உள்ளன. அதிலும் 5 மட்டுமே உலகம் முழுவதும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அந்த 5 உணவுப் பயிர்கள் என்னென்ன? ஏன் அவை மட்டும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன?


கோதுமை, அரிசி, மக்காசோளம், உருளைக்கிழங்கு, தக்காளி.  இவை ஐந்து மட்டும் தான்.  ஏன் என்றால் நுகரப்படும் உணவுப் பொருட்களின் வகை அதிகரிக்க அதிகரிக்க அவை எல்லாவற்றையும் ஒரே முறையில் பாதுகாப்பதோ, கொண்டு செல்வதோ முடியாத காரியமாக பெருமுதலாளிகளுக்கு உள்ளது.  அவற்றின் அளவு குறையும்போது பெருமளவில் அவற்றைக் கொள்முதல் செய்வதோடு எளிதாகக் கொண்டு செல்லவும் முடிகிறது என்பது ஒரு காரணம்.

இரண்டாவதாக 5 வகையான உணவுப் பயிர்கள் இருந்தால் அவற்றின் விற்பனையும், கொள்முதலும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.  5 வகை இருக்கவேண்டிய இடத்தில 20 வகை உணவுப் பொருட்கள் இருந்தால் சந்தை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதும் முக்கியமான காரணம்.


"மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஈய தீயும்
தீ முரணிய நீரும்
என்றாங்கு ஐம்பெரும்பூதத்து இயற்கை" என்று ஒரு பாடல் படித்தேன். தமிழால் போற்றப்பட்ட ஐம்பெரும்பூதங்களில் மனித இனத்தின் நுகர்வு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது?

ஆமா, தொல்காப்பியத்தில் இருக்கிறது. "நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" என்றும் வருகிறது. அதாவது இந்த மனுசன் இருக்கானே மனுசன், பூமியில் இவன் ரொம்ப குறைச்சலான சதவீத்தில் தான் இருக்கிறான்.  ஆனால் இவன் பாழ்படுத்தியிருக்கிற விசயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நீர் கெட்டுப் போச்சு, அது போகக்கூடிய நிலம் கெட்டுப்போச்சு. இவன் உருவாக்கிய தொழிற்சாலைகள் வெளியிடுகின்ற புகையினால் காற்று மண்டலம் கெட்டுப் போச்சு.  மரங்கள் ரொம்ப குறைஞ்சுப் போச்சு. அதனால் மழையும் நின்னுப் போச்சு. கரியமில வாயுவினால் ஓசோன் அடுக்கில் துளைகள் விழுந்த வண்ணம் இருக்கின்றது. அதனால் வான் பகுதியும் கெட்டுப் போச்சு. புவி வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகுது.  ஓரு விசயம் சொல்றேன், கேட்டுக்க...  இங்க, இந்த உலகத்தில் மனுசன் இல்லைனாலும், மத்த மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் எல்லாமே இருக்கும். ஆனா அதெல்லாம் இல்லைனா இவன் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அது புரியாத வரை இயற்கை பாடம் நடத்திட்டே இருக்கும். புரிஞ்சுதா?



நீர் மாசு பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள் ஐயா. பழந்தமிழர்கள் பயன்படுத்திய நீர் ஆதார அமைப்புகள் 50 வகைகளாக நாமதீப நிகண்டு பிரித்துள்ளது என்கிறார்கள்.  அப்படிப்பட்ட தமிழகத்தில் நீர் எவ்வாறு கையாளப்படுகிறது?

நாம தீப நிகண்டு எல்லாம் சரி. அதில் குறிப்பிட்ட எதுவும் இருக்குதா? அப்பிடியே  இருந்தாலும் என்ன நிலைமையில் இருக்கு? நாம் உணவில்லாமல் கூட சிறிது காலம் உயிர் வாழ்ந்து விட முடியும்.  ஆனால் அருந்த நீர் இல்லை என்றால் 3 நாட்களுக்கு மேல் உடம்பில் உயிர் தாக்குபிடிக்காது. தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்து பார்த்தா புரியும். குறை சொல்லலை. நடப்பு என்ன அதை சொல்றேன்.  பாலாறு முதல் தாமிரபரணி வரை எப்பிடி இருக்கு?  தோல் பதனிடும் தொழிற் கழிவுகள், சாயப் பட்டரைக் கழிவுகள், நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள், இவ்வளவையும் தாண்டி ஆறு உயிர் பிழைத்து ஓட முயற்சி செய்கிறது. ஒரு வாசகம் உண்டு.  "மக்களால் மக்களுக்காக".  மக்களும் புரிஞ்சுக்கணும். நீ ஆளைத் தேர்ந்தெடுத்து அரசாங்கத்திற்கு பிரதி நிதியாக அனுப்புகிறாய். அவன் சா¢வர வேலையைச் செய்யலைனா நீ தான் அவனைக் கேட்கணும். அதே நேரத்திலே நீயும் உன் பொறுப்பை உணர்ந்து நடந்துக்கணும். ஆற்றில் ஓடும் நீரை கையால் அள்ளிக் குடித்த நாம் இன்று ஒரு கையில் வைத்துள்ள பாட்டில் தண்ணீரைக் குடித்து விட்டு மறுகையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ஆற்றைக் கடந்து செல்கிறோம்.இது தான் நாம் நீரைக் கையாள்வதற்கு நான் சொல்லும் உதாரணம்.


பொருத்தமான கருத்துகள் சொன்னீர்கள் அய்யா.  இன்னொன்று உங்களிடம் கேட்க வேண்டும். "உணவுச் சங்கிலி", இயற்கையின் மிக அடிப்படையான பகுதி. அதன் நிலை?

"உணவுச் சங்கிலி"யை  மிக எளிமையாக நமக்கு நன்கு தெரிந்த விசயத்தை வைத்து சொல்கிறேன். 


மாடு உழவர்களுக்கு மிக முக்கியமான ஒண்ணு. அதோட சிறப்பு என்னன்னா நமக்கு எதெல்லாம் வேண்டாமோ அதை எல்லாம் வாங்கிட்டு  நமக்குத் தேவையான பொருளெல்லாம் தருது. பால், தயிர், மோர் என்று நேரடி உணவா பயன்படும் பொருட்களையும், வெண்ணை, நெய் போன்ற பிற உணவுகளொடு சேர்ந்து உண்ணும் பொருட்களையும் தருது. நான் ஒவ்வொன்னாச் சொல்றேன். கவனிச்சுக்கோ.  நம்ம நெல் குத்தும் போது உமி, தவிடு வருது, நெல்லை எடுத்துட்டு தேவையில்லாத உமி, தவிடை மாட்டுக்குக் கொடுத்துடுறோம்.  கரும்பை நம்ம எடுத்துட்டு கரும்புத் தோகையை அதுக்குக் கொடுத்துறோம். கடலையை எடுக்கிறோம், கடலைக் கொடியை மாட்டுக்குக் கொடுத்து விடுகிறோம். "நெல்லுக்குச் செல்லும் நீர் ஆங்கே புல்லுக்கும் பொசியுமாம்" என்ற வாக்கிற்கேற்ப, நெல்லுக்கு உபயோகப்பட்டது போக மீதமிருக்கும் நீரில் வளர்ந்து நிற்கும் புல்லை மாட்டிற்கு கொடுக்கிறோம். இப்படி தேவையில்லாததை எல்லாம் அது எடுத்துக்குது.  



 "ஆ நிரை கவர்தல்" என்பது அக்காலத்தில் முக்கியமான விசயம். இது போக அது என்ன செய்யுது! எரு கொடுக்கிறது, வண்டியை சுமக்கிறது, நிலத்தை உழுகிறது, நீர் பாய்ச்சுகிறது, பிறகு அறுவடை ஆன பொருட்களை ஏற்றி வருகிறது, உன்னையும் வண்டியில் வைத்துக் கொண்டு செல்கிறது.  இப்படி ஆறு விதமான வேலையை செய்கிறது.  நீ என்ன பண்றே? அதை கசாப்புகடைக்கு அனுப்பிட்டு, ட்ராக்டர் வாங்கி நிலத்தை உழுகிறாய். என்ன ஆச்சு? நிலம் கெட்டிப்பட்டு பாழ் ஆகுது.  டீசல் விலை ஏறி போகுது. உன்னாலே சமாளிக்க முடியலை.  எரு போடாமல் நச்சுக்கொல்லி உரம் போடுறே, விளைச்சல் விஷமா போகுது. ஒரு குறிப்பு உனக்குச் சொல்றேன்... 45 சதவீதம் குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் வயிறு உப்பி உடல் நலக் குறைபாடுடன் இருக்கிறார்கள் என்றும் இது ஒரு தேசிய அவமானம் என்றும் பிரதம மந்திரி சொல்லியிருக்கிறார். தெளிவற்ற கொள்கை, செயல்பாடே இதுக்குக் காரணம். இப்படி தான் "உணவுச் சங்கிலி" மனிதனால் உடைக்கப்படுகிறது.



விவசாயம் இந்நாட்டின்  முதுகெலும்பு என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த முதுகெலும்பு பலவீனமான நிலையை அடைந்துக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு பக்கம் விவசாய இடுபொருள்களுக்கான விலையேற்றம், வேதி உரங்களுக்கான மானியம், இடைத்தரகர்களால் நிர்ணயிக்கப்படும் விலை, இவ்வளவு சூழ்நிலைகளுக்கிடையில் எவ்வாறு உழவுத் தொழிலை மேற்கொள்ள முடியும்?

1935ம் ஆண்டு, நேரு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். "உழுபவனுக்கே நிலம் உடைமை ஆகும்", அதாவது அவனுக்கே சொந்தம் என்று வர வேண்டும் என்றார்.  இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மத்திய அரசாங்கம் இதற்கென ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு குடியானவனுக்கு என்று 6 ஏக்கர் கொடுக்க வேண்டும் என்றது.  பிறகு அதை 3 மடங்காக உயர்த்தி 18 ஏக்கர் கொடுக்க வேண்டும் என்றது.  ஆனால் அதைச் சட்டமாக்க முன்வரவில்லை.  மாநிலங்களின் பொறுப்பில் அதை விட்டுவிட்டது. 1958 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இதைச் சட்டமாக்க வலியுறுத்தியது.  ஆனாலும் கிணற்றில் போட்ட கல்லாக தான் நிலைமை உள்ளது. இப்படி தான் விவசாயிகளைப் பற்றி எந்தக் காலத்திலும் உண்மையான அக்கறை இருந்தது இல்லை. 



தேசிய அளவில் வேளாண் கொள்கைப் பற்றி?

இங்க பாரு தம்பி, இந்தியாவில் மொத்தம் 32 விதமான தட்பவெப்ப நிலைகள்  உள்ளன. நீ பாரு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் மழைக் காலம் முடிஞ்ச உடனே விதைப்பாங்க.  ஆனா கரூர், திருச்சி, புதுக்கோட்டை இங்க எல்லாம் மழைக் காலம் தொடங்கும்போது விதைப்பாங்க. ஏன்னு கேட்டின்னா அங்க ஊட்டி மாதிரி இடங்களில் ஏற்கனவே தண்ணீர் நிற்குது. அங்க மழை வேற வரும்போது விதைச்சா அழுகிப் போயிடும்.  கரூர் மாதிரி இடத் பார்த்தா அங்க தண்ணி இல்லை. தண்ணீர் தேவை.  அதனால் தான் மழை பெய்யும்போது விதைக்கிறாங்க. இதே மாதிரி தான் கன்னியாகுமரியில கூட நடக்குது. இன்னும் சொல்லணும்னா தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் இங்கு எல்லாம் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.  அதனால் அப்போ அங்க நெல் விதைச்சா நல்ல பலன் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு சூழ் நிலைகளில் ஒவ்வொரு விதமான பயிர்கள் உற்பத்தி ஆகின்றன. அப்படி தான் எல்லா இடங்களிலும் தட்பவெப்ப பூகோள நிலையைப் பொறுத்துத் தான் எப்போ என்ன பயிரிடலாம்னு முடிவு பண்ணுவாங்க. 



ஆனா அரசாங்கம் எல்லாத்தையும் மாத்திடுச்சு.  எல்லாரும் ஒரே நேரத்தில் ஐ.ஆர்.50, ஐ.ஆர்.20 போடுங்க, நாங்க கொடுக்கிற விதையை விதைங்க, நாங்க சொல்ற உரங்களுக்கு மட்டும் மானியம் கொடுப்போம், சொல்வதைக் கேட்டால் மட்டுமே லோன் இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கு. விவசாயி என்ன பண்ண முடியும்? கடைசியில் பார்த்தா கால நேரம் யோசிக்காம விதைச்சு வளர்ந்து நிக்கிற 2 லட்சம் ஏக்கர் உணவு தானியம் வெள்ளத்திலே அடிச்சுட்டு போயிட்டுது. அரசாங்கம் நட்ட ஈடு கொடுப்பேன் என்று சொல்லுது. இவை எல்லாவற்றிக்கும் ஒரே விதமான கொள்கை எப்படி நிர்ணயிக்க முடியும்?

அரசாங்கம் விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கக் கூடாது என்பது தானே நீங்கள் கூற வருவது, விவசாய பெருமக்களும் தங்கள் நிலையை விளக்கிக் கூறலாமே!


ம், புரிஞ்சுகிட்ட! அதையே தான் நானும் சொல்றேன்.  விவசாயிகளுக்கு உங்கள் பிரச்சினை என்ன, அதை எப்படி தீர்ப்பது என்பது உங்களுக்குத் தான் தொ¢யும்.  அது அரசாங்க அலுவலர்களுக்கோ, மேலிருந்து சட்டம் இயற்றுபவனுக்கோ தெரியவில்லை, இது தான் நடைமுறை உண்மை. நீங்கள் தான் அவர்களுக்கு உண்மை நிலையை விளக்கிக் கூற வேண்டும்.  ஒருமித்த குரலில் சொன்னால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.. புரிஞ்சுதா? அடுத்த கேள்வி என்ன?

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், பருவ மழை தப்பிப் பெய்தல், வறட்சி நிலை,  தமிழகத்தில் எடுத்துக் கொண்டால் காவிரி டெல்டாவில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, இப்படி ஒரு சூழல் இருந்து வரும் போது நம் விவசாயிகள் ஏன் நெல் போன்ற அதிக நீர் பயன்பாடு உடைய பயிர்களை பயிரிடுகிறார்கள்.  வேறு ஏதேனும் மாற்று பயிருக்கு மாறவேண்டியது தானே?

அய்யா, உனக்கு விரிவாக பதில் சொல்கிறேன். முதலில் பருவ மழைப் பொய்த்துப் போனா என்ன பண்றதுன்னு கேக்கிறே. சரி! அப்பிடியே இருந்தாலும்  நாம் ஏரிகளை தூர்வாரி வச்சிருந்தோம்னா , குளங்களை வெட்டி சரியாக வச்சிருந்தோம்னா எப்போ மழை பெய்தாலும் சேகரிக்கலாமே! பிறகு தானா நிலத்தடி நீர் மட்டம் உயரும், அதனால் வறட்சி நிலை போயிடுமே!  இரண்டாவதாக காவிரி டெல்டா விவசாயிகள்  நெல்லுக்குப் பதிலாக வேறு பயிர்களை பயிரிடலாமேன்னு சொல்றே!.  அப்படி இல்லை, நீர் குறைவா இருந்தாக்கூட நெல் பயிரிடலாம்.  ராமனாதபுரத்தில் செய்றாங்க! நல்ல கோடைக் காலத்தில் மழை பெய்யும் சமயத்தில் புழுதி வர நிலத்தை உழுது நெல் விதையைப் விதைக்கிறாங்க.  முளைக்கும் பயிருக்கு கொஞ்சம் தண்ணி போதும். அது வளர்ந்து வரும் போது நல்ல ஊட்டம் தேவை, தண்ணி தேவையும் அதிகம்.  அப்போ மழைக் காலம் வந்துடும். அதனால தான் சொல்றேன்,  நெல்லுக்கு அதிக நீர் தேவை இல்லை. இதை மாதிரி புதுக்கோட்டை, சிவகங்கை, தர்மபுரி இங்கு எல்லாம் பண்றாங்க. இன்னொண்னு, பாரம்பரிய விதை நெல் விதைக்கணும்.  ரசாயன உரம் மட்டும் இல்லாமல் விவசாயம் பண்ணினால் நிலத்தைக் காய விட்டு காய விட்டு தண்ணீர் பாய்ச்சலாம். செடி பிழைச்சுக்கும். 



ஓ! ரசாயன உரம் மண்ணோட உயிர்ப்புச் சக்தியை குறைத்து விடும், அது தானே!

இல்லை, உப்பு சாப்பிட்டவன் தண்ணி குடிக்கணும், அது மாதிரி தான். உரம் போட போட தண்ணீர் அதிகம் தேவைப்படும், செடியும் காய்ந்து போய் விடும். உரத்தை விட்டுட்டு இயற்கைக்கு மாறிடணும். இது இல்லாம நீ கேட்டியே வேற பயிர்கள், அப்படிச் செய்யலாம்.  புஞ்சை தானியங்கள் இருக்கே, சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரை வாலி, சாமை, திணை, எள்ளு, கொள்ளு, தட்டப்பயறு, பாசிப்பயறு, மொச்சை, துவரை இப்படி எல்லாமே பயிரிடலாம். 

ரி, ஆனால் புஞ்சை பயிர்கள் எல்லாம் நெல் அளவுக்கு நம் மக்களால் உணவுக்குப் பயன்படுத்தப்படுவதில்லையே?

ம்ம்... அதெல்லாம் இல்லை.  இன்னமும் இந்தியாவில் 40 சதவீத மக்கள், 45 சதவீத கால் நடைகள் புஞ்சை தானியங்களை நம்பி தான் இருக்காங்க.  60 சதவீத நிலங்கள் இந்தியாவில வானம் பார்த்த பூமியாகத் தான் இருக்கு. அந்த இடங்களுக்கு எல்லாம் இந்த பயிர்கள் தான் பொருத்தமானவை. அதைத் திட்டம் போடுறவங்களும், விவசாயிகளும், நுகர்வோரும் புரிஞ்சுகிட்டா பஞ்சம், வறட்சி எல்லாம் இல்லாமப் போயிடும்.  இதில் விழிப்புணர்ச்சி தேவை தம்பி.


நீங்க இந்திய அளவில் எல்லா மாநிலங்களுக்கும் சுற்றி வந்திருப்பீர்கள்.  எந்த மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் நடக்கின்றன?

கர்னாடகா, அங்க பார்த்தீங்கனா கேழ்வரகு பயிரிடுறாங்க, சாப்பிடுறாங்க. நெல் பயன்பாடு குறைவு.  52 வகை கேழ்வரகு ரகங்களை அவங்க உற்பத்தி பண்றாங்க, இன்னொன்று மலைத் தோட்டப் பயிர்கள் பயிரிடுவதில் அவங்க கெட்டிக்காரங்களா இருக்காங்க. அப்புறம் இயற்கை வேளாண்மை அதிகம் நடக்கிறது.

மஹாராஷ்ட்ராவில் மழை பொழியும் பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  அதே நேரத்தில் வானம் பார்த்த விவசாயம் நடைபெறும் பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாகவும் அது உள்ளது வருந்தமான விசயம்.

விதர்பா??

ஆமாம், விதர்பா மஹாராஷ்ட்ராவில் வானம் பார்த்த பூமி. அங்கே மழை இல்லாமல் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்கின்றனர். இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 250000 விவசாயிகள் இறந்து போய் இருக்கின்றனர். அதில் பெருவாரியான மக்கள் விதர்ப்பாவைச் சேர்ந்தவர்கள், இப்பவும் அப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏன்? இதைத் தடுக்க எந்த ஒரு மாற்றுத் திட்டமும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லையா?

உண்மையைச் சொல்றேன்.  அரசாங்கத்துக்குத் தெளிவான பார்வை இல்லை.  கஷ்டப்படும் விவசாயிக்கு கறவை மாடு லோன் கொடுக்கிறாங்க. அவனே சாப்பிட வழி இல்லாம நிக்கிறான்.  இந்த மாட்டை வைத்து அவன் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் அவனை புஞ்சை பயிர் செய்யும் நிலத்தில் பருத்தி போடச் சொன்னாங்க. பருத்தி செடியை மாடு சாப்பிடாது. அதனால அங்க மாட்டுக்கு தீவனம் இல்லாம மாட்டை வித்துடுறாங்க.  அந்த அடிப்படையான உண்மையைக்கூட தெரிஞ்சுக்காம அப்படி உள்ள சூழ்நிலையில் "ஹைப்ரிட்" மாடுகள் எனப்படும் கலப்பின மாடுகளைக்  கொடுத்தா அவன் அந்த மாடுகளுக்கு எப்படி சாப்பாடு கொடுக்க முடியும்?  இது அரசாங்கத்தோட கண்மூடித்தனம்.




அய்யா! ஒருபுறம் இருக்க உணவு தானிய கையிருப்பு அதிகமாக இருப்பதாகவும், மற்றொரு புறம் உணவு உண்ணக்கூட வழி இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன, என்ன காரணம்?

தானிய கையிருப்பு அதிகம் இருந்து என்ன பண்றது. அதைப் பாதுகாப்பாக வைக்காமல் பூச்சி சாப்பிடுது, பூஞ்சை பிடிச்சு போகுது, எலி தானியத்தை நல்ல சாப்பிடுது, திறந்த வெளியில் தானிய மூட்டைகளை அடுக்கி தார்ப்பாலின் போட்டு மூடி வைக்கிறாங்க. அதிகமாக காத்து அடிச்ச தார்ப்பாலின் விலகி தானியங்கள் கெட்டு போகுது. இப்படி வருஷத்திற்கு  மட்டும் ஒரு லட்சம் டன் தானியங்கள் வீணாக போகுது.

அப்போ ஒரு தெளிவான பார்வை அவங்களுக்கு வேணும் இல்லையா?



கண்ணைத் தொறந்து பார்க்கவே தயாரா இல்லை.  இது பற்றி நான் மட்டுமா சொல்றேன், எல்லாரும் தான் பத்திரிக்கையில், தொலைக்காட்சியில் சொல்றாங்க, எழுதறாங்க. காதில் வாங்கவே இல்லையே!

உங்களை மாதிரி அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது!

அதற்கு அவசியம் இல்லை. உழுதுண்டு வாழும் மக்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்டாலே எங்களிடம் கேட்டது போலத் தான்.

நீங்கள் வெளி நாடுகள் பலவற்றிற்கும் சென்று இருக்கிறீர்கள்.  அப்படி சென்று இருக்கும் போது ஏதேனும் சுவையான சம்பவம் நிகழ்ந்து இருக்கும்,  அப்படி இருந்தால் அதைப் பற்றி கூறலாமா?

ம்ம்.... ஆம். கூறலாம். சுவீடன். அந்த நாடு எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாடு. ஒரு முறை அங்கு சென்றிந்தபொழுது என்னை விமான நிலையத்தில் வரவேற்க ஒரு அம்மையார் வந்திருந்தார்கள்.  அவர்களே தனது காரில் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.  அவரது வீட்டில் அவரது கணவர் வீட்டு வேலைகளை செய்துக் கொண்டிருந்தார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அந்த நாடு பெண்களுக்கு சம உரிமை வழங்கிய நாடு.  அதற்காக இதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.  இன்னொரு விசயம், என்னை அங்கு கூட்டிச் சென்றவர் ஒரு பத்திரிக்கையாளர், அவர் அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டினார். நான் என்ன என்றுக் கேட்டேன். இரண்டாம் உலகப் போர் முடிந்து எங்கள் மக்கள் ஏழ்மையில் வாடிய பொழுது அவர்களுக்கு கஞ்சி தயார் செய்துக்கொடுத்த இடம் என்று சொன்னார்.  எனக்கு என்ன வியப்பு என்றால் அந்த அளவுக்கு 1945ல் வறுமையில் வாடிய மக்கள் இன்று முயற்சியாலும், தெளிவான உழைப்பாலும் தன்னிறைவு பெற்று வாழ்கிறார்கள். அது ஒரு சந்தோசமான நிகழ்வு.
அவர்கள் தமிழ் நாட்டிற்கு 110 கோடி ரூபாய் காடு வளர்க்கக் கொடுத்து இருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆண்டு வருமானத்தில் ஒரு சதவீதம் தான்.

அந்த நிதி முறையாக நல்ல முறையில் பயன்படுத்தப்படவேண்டியது அவசியம். காடு வளர்ப்பு பற்றி இப்பொழுது அதிகம் பேச்சு இருக்கிறதே? அதைப் பற்றி?

சுவீடனில் இருந்து கொடுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என அறிந்து கொள்ள டூர்ஸ் காரூட் என்ற ஒருவன் வந்து இருந்தான். நான் புதுக்கோட்டையில் வளர்த்துக் கொண்டிருந்த காட்டுப் பகுதிகளைப் பார்த்து நீ விவசாயம் சார்ந்த காடுகளை வளர்க்க சரியான ஆள் என்று கூறினான்.  நான் அவனிடம் வேறு ஏதாவது விசயம் சொல்லு என்று கேட்டேன். அதற்கு அவன் "உங்கள் பகுதிகளில் காட்டிற்கும், தோப்பிற்கும் வித்தியாசம் தெரியவில்லை.  ஒரே வகை மரங்களை வரிசையாக வைத்து வளர்த்து விட்டு அதை காடு என்று அழைக்கிறீர்கள்". "காடு என்பது பல்லுயிர் பெருக்கம் நிகழ்வதற்குரிய பல்வேறுபட்ட தாவர இனங்களை உள்ளடக்கியது" என்பது கூட தெரியவில்லையே என்று கேட்டான். இந்த வித்தியாசம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.


இன்னொரு கேள்வி, அமெரிக்காவில் தேனீக்கள் கொத்து கொத்தாக மடிந்து போகின்றன என படித்தேன்.  இதனால் உலகின் இயற்கை சமனிலை பாதிக்கப்படுமா?

அமெரிக்காவில் மட்டும் இல்லை, ·ப்ரான்சில் கூட இதே நிலை தான்.  ஏன் தெரியுமா? அங்க எல்லாம் விவசாயிகளுக்கு 5000 ஏக்கர், 10000 ஏக்கர் என தனிப்பட்ட அளவில் பெரிய பண்ணைகள் இருக்கும்.  அவன் என்ன செய்வான், ஹெலிகாப்டரை வச்சு நஞ்சு தெளிக்கிறான்.  அங்க வர்ற தேனீ அப்படி விஷச் செடியில் வளர்ந்த பூவை சாப்பிட்டு சாகாம என்ன செய்யும்? அதனால அங்க உணவுச் சங்கிலி அறுபட்டு போகுது. ஆனா இந்தியா போன்ற நாடுகளில் அந்த அளவிற்கு நடக்க வாய்ப்பு இல்லை. இங்க கூட வெளி நாட்டிலிருந்து தேனீயை இறக்குமதி பண்ணாங்க. அது அளவுல பெருசு, சீக்கிரம் தேன் சேகரிக்க முடியும், அப்படிலாம் சொன்னாங்க, நடந்தது வேற, அந்த தேனீகள் தன்னோட பெரிய உருவத்தை வைச்சுட்டு வேகமா பறக்க முடியலை. இந்தியத் தேனீயோ அளவில் சின்னது, அதனால சுளுவா பறந்து போயிடும். குருவி மாதிரி பறவைகள் இந்தக் காரணத்தால் எளிதில் வெளி நாட்டு தேனீகளை சாப்பிட ஆரம்பித்தன.  விளைவு, இறக்குமதி பண்ண தேனிகள் அழிஞ்சுப் போச்சு.  அதே நேரத்தில் முட்டையிடக்கூடிய நம் நாட்டு பெண் தேனீக்கள் எண்ணிக்கை அதிகம் ஆயிடுச்சு. அதனால் சொல்றேன், இயற்கை தன்னைத் தானே சம நிலைப்படுத்திக்கும். அதை நாம ஒண்ணும் செய்யாம இருந்தாலே போதும்  இயற்கை செழித்த பிறகு தான் மனிதனே பிறந்தான்.  நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பூமியில் எல்லா உயிரினங்களும்  உருவாயிடுச்சு.  இயற்கையிடம் இருந்து கற்றுக் கொள்.

வாசகர்களுக்கு உணவு பற்றி நீங்கள் கொடுக்க விரும்பும் செய்தி என்ன?

பொதுவாக மனிதர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.  உடல் உழைப்பைக் கொடுப்பவர்கள், மூளை உழைப்பை மூலதனமாக உடையவர்கள்.  உடல் உழைப்பாளிகளே மூளை உழைப்பாளர்களாக  மாறினர்.  ஆனால் அவர்களுக்கு உரிய உணவு முறை இவர்களுக்கு இருக்கக்கூடாது. ஏன்னு கேட்டா உடல் உழைப்பாளிகளுக்கு சக்தி அதிகம் தேவை, வெப்பம் தேவை. அவங்க மாவுப் பொருட்களை சாப்பிடணும். உதாரணமா சொல்லணும்னா அரிசி,  சோளம், கோதுமை இந்த மாதிரி விசயங்களை சேர்த்துக்கணும். ஆனா மூளையை கொண்டு உழைக்கிறவங்க நல்ல படியா உடம்பைப் பார்த்துக்க பழங்கள், காய்கறிகள், பருப்பு, கீரை வகைகளை சேர்த்துக்கணும். இரண்டு பேருக்கும் வெவ்வேறு உணவு முறைகள் தான் சரியாக இருக்கும்.


இன்னொரு விசயம், முக்கியமான ஒன்று,  நம்ம நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்.  அவங்களுக்கு போதுமான ஊட்டச்சத்து தேவை.  ஆனால் இங்க ஆயி, அப்பன் என்ன பண்றாங்க அவங்க சாப்பிடும் சாப்பாட்டை குழந்தைகளுக்குக் கொடுத்துடுறாங்க.  இது தப்பு.  பெரியவங்களுக்கு சக்தி தான் தேவை.  குழந்தைகளுக்கு புரதம் போன்ற் ஊட்டம் தேவை.  அதுகளுக்கு பால், முட்டை, பருப்பு, காய்கறிகள், மீன், இறைச்சி இதெல்லாம் கொடுக்கலாம். 

இன்னொன்ணு, இப்பலாம் எல்லாரும் குடும்பத்தோட ஒரே ஒட்டலுக்கு போய் ஒரே வகை உணவுகளைச் சாப்பிடுவாங்க. இப்படிலாம் கவனம் இல்லாம இருக்கிறதால ஊளைச் சதை போடுது.  அவன் வாழும் வரை நிம்மதி இல்லாம உடலை பாரமா சுமக்கிறான். அதனால் சாப்பாடு விசயத்தில் கவனமா இருங்க.


வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.   நீங்கள் நடந்து போகும் போது உங்கள் பின்னாடி ஓடி வரவேண்டியிருக்கிறது. எப்படி இந்த வயசிலும் அவ்வளவு சுறுசுறுப்பு, வேகம், எங்களுக்கு அந்த ரகசியத்தை சொல்லுங்க.

அப்படி இல்லை, ஒரு புரிதல். தெளிவான புரிதல்,  உலகத்தில் நாம் நுகரும் எல்லாப் பொருட்களும் உழைப்பால் விளைந்தது. அதிலும் மனித உழைப்பு கொஞ்சம் வேறுபட்டது, தனித்துவமானது.  ஏன் அப்படினா மாடும் உழைக்குது. ஆனா அதுக்கு சிந்திக்கும் சக்தி இல்லை.  மனுசன்    சொல்றதை தான் அது கேக்குது. ஆனா மனுசன் மட்டும் தான் தான் செய்யக்கூடிய வேலை என்ன என்பதைப் புரிஞ்சு செய்யுறான்.  அப்போ இதில் ஒரு தெளிவு. அதனால் என்ன செய்யணும், கொள்ளணும்னு பார்த்தா நிறைய வேலைகள் நம்ம மண்டையில இருக்கு. முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதால் வேகமா ஓடுறோம். அதான் காரணம், வேற ஒண்ணுமில்ல. நம் வாழ்க்கை மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கான ஒரு களம் ஆக இருக்க வேண்டும்.


உங்களைப் பாதித்த இருவர்கள் பூமிதான இயக்கத் தந்தை வினோபா பாவே, ·பாலோ ப்ரெய்ரி பற்றி...

அய்யா வினோபா பாவே அவர்களை பார்க்க ஒரு இளைஞன் வந்தான்.  அவனிடம் அவர் கேட்டார், "நீ என்ன படிச்சிருக்கே?" என்று.

"எம்.ஏ" என்று பதில் வந்தது.  "சரி, என்னவாகப் போகிறாய்?" என்றார்.  "ஆசிரியராகப் போகிறேன்" என்றான்.

ரி, உனக்கு நூல் நூர்க்கத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றான்.

அதை தறியாக நெய்யத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றான்.

தறியில் வந்தத் துணியை சட்டையாக தைக்கத் தெரியுமா? என்று கேட்டார்.  "தெரியாது" என்றான்,

விவசாயம் தெரியுமா, ஆடுமாடு மேய்க்கத் தெரியுமா? என்று கேட்டார், " தெரியாது" என்றான்,

சட்டிபானை செய்ய தெரியுமா? என்று கேட்டார்.  "இதெல்லாம் தெரியாம யாரும் ஆசிரியராக முடியாதா?" என்று கேட்டான்.

அதற்கு அவர் சொன்னார் "அப்பா, உனக்கு இதெல்லாம் தெரியலைனாலும் பரவாயில்லை. பொறுமை இருந்தா போதுமே" என்று.

அவர் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான், "கல்வியும் செயலும் ஒன்றுக்கொன்று தாயும் பிள்ளையும் போலத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

பால் கொடுக்கும் போது குழந்தை என்ன நினைக்கும், தாய் தன் பசியைப் போக்குகிறாள் என்று.  தாய் என்ன நினைப்பாள் என்றால், குழந்தை தன் பாரத்தைக் குறைக்கிறது என்று. இப்படித் தான் இணையாக கல்வியும், செயலும் இருக்க வேண்டும்.  தேனீரில் இனிப்பு கலந்தாற்போல இரண்டும் ஒன்றொடு ஒன்று கலந்திருக்க வேண்டும்"

அய்யா வினோபா பாவேவின் அந்த வழிக்காட்டுதலின் படி தான் இங்க நம்ம எதிலும் நேரடி செய்முறைப் பயிற்சிக் கொடுக்கிறோம்.


·பாலோ ·ப்ரெய்ரி சொன்னது நீ சேவை செய்ய வந்திருக்கே. நீ ஒரு தன்மையுடனும், மக்கள் வேறு தன்மையுடனும் இருந்தால் அவங்களோட தேவை என்ன என்று உனக்குப் புரியாது. அதனால அவங்களோட இரண்டறக் கலந்து விடு.. இது தான்.

அவர்களை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.  பட்டணத்தை ஒட்டியுள்ள  சேரி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரலாம் என்று முடிவெடுத்து பாடப் புத்தகங்களைக் கொடுத்தார். அடுத்த வாரம் அவங்களைப் பார்க்கப் போகும்போது பாடபுத்தகம் நல்லா இருக்குதா என்று கேட்டார்.  குழந்தைகள் "உம்" என்றன.  உங்களுக்குப் புரியுதா என்றுக் கேட்டார். "உம்" னு சொன்னதுங்க. எடுத்துட்டு வா என்று சொன்னார். ஒரு பிள்ளைகளும் திரும்பி வரவில்லை.காரணம் தொ¢யாமல் அவர் அடுத்த நாள் குழந்தைகளின் பெற்றோர்களை பார்த்துக் காரணம் கேட்டார்.  இல்லை, கூரை வீடுகளில் குறுக்குச் சட்டங்களில் புத்தகங்களை வைத்து மழைத் தண்ணீர் பட்டு எல்லாம் வீணாகி விட்டது என்று சொன்னார்கள்.  அப்பொழுது தான் அவருக்கு புரியுது, இவங்களுக்கு புத்தகம் மூலம் எந்த பலனும் கிடைக்காது என்று. அவர் அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார். அவர்களுக்கு நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு பாடம் நடத்த வேண்டும் என்பது தான்.  குழந்தைகளைக் கூப்பிட்டார்.  கற்களை எடுத்து வரச் சொன்னார். கற்களை "ஏ", "பி", "சி" என்ற வடிவங்களில் அடுக்கி வைத்து சொல்லித் தர ஆரம்பித்தார்.  மழை பெய்ய ஆரம்பித்தது.  ஆனாலும் கற்கள் கலையவில்லை.  இவரும் கிளம்பி விட்டார்.  ஆனாலும் அவனுக கல்லை வைத்து கத்துக்கிறதை விடவில்லை.  ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.

·பாலோ ·ப்ரெய்ரி அவர்கள்  சொல்வது என்னவென்றால் மக்கள் ஒரு நிலையிலும் நீ ஒரு நிலையிலும் இருக்கும்போது அவர்களிடம் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.  உண்மையில் நீ அவர்களுக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் அவர்களோடு கலந்து அவர்கள் நிலையில் இருந்து செயலாற்ற வேண்டும்.

இவர்கள் இருவரும் என்னிடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியவர்கள்.

இப்படி சேர்ந்து பண்ணாமல் அறிவுரையை மட்டும் கேட்டுச் செயல்படுவது தீங்கை தான் விளைவிக்கும். அதுக்கு ஒரு கதை உண்டு. அருமையான கதை. கேளு.

ஒரு கண்பார்வை இல்லாதவன் ஒவ்வொரு கடையாகப் போய் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.  அவனைப் பார்த்த ஒரு கடைக்காரனுக்கு அவன்மேல் பரிதாபமாக இருந்தது. கடைக்காரன் அந்த கண்பார்வை இல்லாதவனைத் தன்னோடு வைத்துக் கொண்டான். நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தாலும் அந்தப் பிச்சைக்காரனுக்கு ஏதோ அப்படி அமர்ந்து உண்பதில் திருப்தி இல்லை.  பிறகு ஒரு முடிவு எடுத்து அந்தக் கடைக்காரனிடம் சென்றான்.  "அய்யா! முன்பு எனக்கு சாப்பாடுக்கு வழி இல்லை என்றாலும் ஒவ்வொரு இடமாக சென்று பிச்சைக் கேட்டு உண்பதில் உழைத்த ஒரு சுகம் இருந்தது. ஆனால், எனக்கு இப்பொழுது நிம்மதி இல்லை. நான் கிளம்புகிறேன், மன்னித்து விடுங்கள் என்றுக் கூறிக் கொண்டே கிளம்பி விட்டான்.  ஒரு நிமிடம் நில்லு! இரவு நேரம் ஆகிவிட்டது, விடிந்த பிறகு கிளம்பு என்றார் கடைக்காரர்.  எனக்கு எப்பொழுதுமே இருட்டு தான், போகிறேன் என்றான் அவன்.  இல்லையில்லை, இந்த கைவிளக்கையாவது வைத்துக் கொள் என்றார் கடைக்காரர். அந்த விளக்கால் எனக்கு என்ன பயன் என்றுக் கேட்டான். இல்லை, நீ போகின்ற வழியில் உன் எதிரே யார் வந்தாலும் இந்த விளக்கின் வெளிச்சத்தை வைத்து விலகிச் செல்வார்கள் என்று அதைக் கொடுத்துவிட்டான். அந்த விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு இவன் நடந்து சென்றான்.  திடீரென்று இவன்மேல் யாரோ பலமாக மோதி விட்டார்.  பிச்சைக்காரன் "யார் அது? எனக்குத் தான் கண் தெரியாது! எதிரில் வரும் உனக்குமா கண் தெரியவில்லை? கையில் விளக்கு வைத்திருந்தேனே, அதைப் பார்த்தாவது விலகிப் போயிருக்கலாமே?" என்று சொன்னான்.  எதிரில் வந்தவன் "அய்யா, என்னை மன்னித்து விடு, உன் விளக்கு எரியவில்லை, அதனால் தான் எனக்கு நீ வந்தது தெரியவில்லை" என்றபடி கிளம்பி விட்டான்.  கண் பார்வை இல்லாத அந்தப் பிச்சைக்காரன் ஒரு முடிவுக்கு வந்தான், அந்த விளக்கை வீசி எரிந்து விட்டு தன் மற்றொரு கையில் இருந்த குச்சியை வைத்து தட்டிக்கொண்டே சென்று விட்டான்.  இதைத் தான் சொன்னேன், அறிவுரையை மட்டும் கேட்டுச் செயல்படுவது தீங்கை தான் விளைவிக்கும்.


மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...



மக்களுக்கு ஒரு புது கடமை இருக்கு.  இப்ப உங்கக் குளியல் அறையிலிருந்து தண்ணீர் வெளியே போகும். இடத்தில் வாழை மரம் இருக்குது, அதை வெட்டிவிட்டால் மீண்டும் அது முளைச்சு வரும். நீங்க நடாமலே ஒரு சுண்டைச் செடி முளைக்கும், அதிலிருந்து சுண்டைக்காய் எடுத்துக்கலாம்.  உங்க வேலியில் பிரண்டைக் கொடி இருக்கு. அதை நீங்க பயிர் பண்ணலை. அதிலிருந்து பிரண்டைத் துவையல் வைக்கலாம்.  அதன் துவர்ப்பு சுவை நல்லா இருக்கும். உடம்புக்கும் நல்லது. அதே போல ஆவாரம் செடி.  அதில் இருந்து ஆவாரம் பூ எடுத்து கறி செஞ்சு சாப்பிட்டால் நீரிழிவு நோய் போயிடும். துளசிச் செடி நீங்க பயிர் பண்ணாமலே வளருது. அதை எடுத்து நீங்க டீ போட்டு சாப்பிட்டால் ஊருக்கே காய்ச்சல் வந்தாலும் உங்களுக்குக் காய்ச்சல்  வராது. அதனாலே நீங்க எல்லாம் விளைய வச்சு தான் சாப்பிடணும்னு இல்லை. இயற்கையே எல்லா வேலையையும் பார்த்துக் கொள்கிறது.  அந்த இயற்கையின் பல்லுயிர் பெருக்கம் கெட்டுப் போயிடக் கூடாது. அதைப் பாதுகாக்க ஒரு நுகர்வோர் கூட்டமைப்பு இருக்கணும். 

அப்புறம், விவசாயிகளுக்கு ஒரு வார்த்தை, கம்பெனிகாரன் விதையை வாங்காதிங்க.  எதனால சொல்றேன் தெரியும, நம்ம ஆளு விதையை சாம்பலில் உருட்டி தேவைப்படும் போது உபயோகிக்கிறான். அந்த விதையை பூச்சி அண்டாது.  ஆனா கம்பெனிகாரங்க விஷத்தில் விதையை போட்டு அதை விற்பனை பண்றாங்க. விதையில் ஆரம்பித்து, மண்ணில் உரம் போடுவதில் கலந்து, நாம் உணவாக உட்கொள்ளும் வரை பாய்வதற்கு விஷம் தயாரா இருக்கு. கவனமா இருங்க.

அய்யா! உங்கள் முக்கியமான அலுவல்களுக்கிடையில் இவ்வளவு நேரம் ஒதுக்கி பொறுமையாகவும், விளக்கமாகவும், கனிவாகவும் பதில் சொன்னீர்கள். நன்றி அய்யா!  நிறைய புதிய கருத்துகளைத் தெரிந்து கொண்டோம். தவறாக புரிந்து கொண்ட சில விசயங்களை உள்ளது உள்ளபடி பார்க்க உதவினீர்கள். உங்கள் கருத்துகளை படித்து சிறிதளவேனும் யாருடைய மனதிலாவது விழிப்பு நிலை ஏற்பட்டால் அதுவே மிகுந்த மகிழ்வைத் தரும்.


எனக்கும் என் மனதில் இருந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி! வாழ்க வளமுடன்!

3 comments:

  1. சிறப்பான நேர்காணல்.

    ReplyDelete
  2. பொக்கிஷம்

    ReplyDelete
  3. மிகச் சிறப்பான வேலையை செய்திருக்கிறீர்கள்

    ReplyDelete