மழையே! நீ வாழ்க! பகுதி - 1
சுற்றிச் சூழ மழை வெள்ளம் தெருவை சூழ்ந்து இருக்கும் நிலையில் வீட்டில் தரையில் உள்ள எல்லாப் பொருட்களையும் பரண் மேல் ஏற்றி விட்டு தொடர்ந்து மழை பெய்தால் இன்று இரவுக்குள் வீட்டில் நீர் புகும் என்ற நிலையில் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்! தொடர் மழையினால் வேதனையை அனுபவிக்கும் நிலையில் "மழையே! நீ வாழ்க!" என்ற தலைப்பா?
ஆம், வேறு வழியில்லை, மனிதர்கள் விரும்பினாலும், வெறுத்தாலும் ஐம்பெரும்பூதங்களோடு பின்னிப் பிணைந்தது அவர்களின் வாழ்க்கை. எந்த அளவிற்கு அவற்றுடன் அவர்கள் கொண்டிருக்கும் உள்ளார்ந்த தொடர்பு விடுபடுகிறதோ அந்த அளவு அவர்களின் வாழும் சூழ்நிலை கடினமாகிறது.
இப்பொழுது நாம் அனுபவிக்கும் இந்த நிலை கடினமான ஒன்று தான்,
வீட்டில் இருப்போருக்கு வெளியில் சுற்றிலும் நீர், ஆனால் குடிக்கவோ, சமைக்கவோ நீர் இல்லை, மின்சாரம் இல்லை, வழக்கமான பணிகள் முடக்கம், தொலைபேசியிலிருந்து அலைபேசிக்கு மாறிய பின் அலைபேசியிலும் மின்னூட்டம் இல்லை, எங்கும் தொடர்பு கொள்ளமுடியாத நிலை,
வெளியில் இருப்போருக்கு வீட்டிற்கு எளிதில் வரமுடியாத நிலை, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அடித்த மழையில் இயங்க மறுத்து அங்கங்கே நிற்கும் நிலை, பேருந்தில் வரலாம் என்றால் பேருந்தே நீர்மூழ்கி கப்பலாகி போன நிலை, ஆட்டோ நண்பர்கள் கூட வர மறுக்கும் நிலை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதற்கு யார் காரணம்? ஈவிரக்கமின்றி பெய்யும் கடுமழை, ஏரியை நிரப்பி வீடு கட்டும் கட்டிட நிறுவனங்கள், ஒழுங்காக வேலை செய்யாத மாநகராட்சி, சரியாக சாலை அமைக்காத பணியாளர்கள், அரசாங்கம் என்று வரிசைப்படுத்த ஆயிரம் காரணங்கள் கூறலாம். எல்லாம் சரி, மற்றவர்களை குறை கூறுவதற்கு முன் அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் எனக்கு இல்லை. அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா, என்ன? ஏன் இல்லை, எப்படி அதை போக்கலாம்?
நீர் உயிர்வாழ்தலுக்குரிய அடிப்படையான ஒன்று. அது தடையின்றி கிடைக்கும் வரை நமக்கு அதன் முக்கியத்துவம் புரிவதில்லை. இங்கு நமக்கு என்று என்னையே குறித்துக் கொள்கிறேன்! அதை எந்த அளவிற்கு நாம் மதிக்கிறோம்? கேள்விக்குரிய விசயம்?
எப்பொழுது இலாபநோக்கத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி பொருளாதாரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சமூகம் முன்னிலை பெற ஆரம்பித்ததோ, ஐம்பெரும்பூதங்களும் வணிக நிறுவனங்களின் வளையத்திற்குள் வர
ஆரம்பித்தனவோ, அப்பொழுதே
அழிவை நோக்கிய பயணம் ஆரம்பித்து விட்டது. பொருளாதாரம் வளரட்டும், நான் ஒன்றும் குறை சொல்லவில்லை, ஆனால் அதன் அசுர பசிக்கு ஐம்பெரும்பூதங்களையும், ஐவகை நிலங்களையும் மொத்தமாக பலியிட்டு விடக்கூடாது என்பது மிக மிக மிக முக்கியம்.
இப்பொழுது நான் நிறைய பணம் வைத்திருக்கிறேன், உடனே என்னைப் பார்க்க கிளம்பி விடாதீர்கள். இங்கு நான் ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், நிறைய பணம் வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், எனக்கு மேலும் பணம் சம்பாதிக்க ஆசை, என்ன செய்யலாம்? நிலம் வாங்குவேன், அதில் ஒரு
"மினரல் வாட்டர்" பிளான்ட் நிறுவுவேன், உங்கள் ஊரிலே இருந்து குறைந்த செலவில் ஆற்று நீரையோ ஏரி நீரையோ, குளத்து நீரையோ உறிஞ்சுவேன், அதை சுத்திகரிக்கிறேன் பேர்வழி என்று கூறி உங்களிடமே விற்று விடுவேன், கழிவுகளை திரும்ப அங்கேயே விட்டு விடுவேன், இது ஒரு நிலை, இல்லை வேண்டாம், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் விற்பனை முகவாண்மை எடுத்து சம்பாதிப்பேன், இது ஒரு கேவலமான நிலை.
இல்லை, இப்படி வைத்துக் கொள்வோம்! நான் ஒரு சாதாரணமான மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஊழியன், நான் என்ன செய்வேன்? தாகம் எடுத்தால் கடையில் 1லிட்டர் "Aquafina" பாட்டில் வாங்கி தாகத்தை தணித்துக் கொள்வேன். வீட்டிலிருந்து மறந்தும் கூட நீர் எடுத்து செல்ல மாட்டேன். அலுவலகத்திலும் அதே நிலை தான். யதார்த்தமாக பார்த்தால் "Cane Water" இல்லாமல் எந்த இடமும் இல்லை. சரி, பிறகு என்ன, மாதம் ஒரு முறையோ இரு முறையோ "Multiplex" சென்று "Cinema" பார்ப்பேன். அங்கு 300 ரூபாய்க்கு "Combo" offer என்று பாப்கார்னுடன் "Coke" பாட்டில் கொடுப்பார்கள், அதையும் முழுங்குவேன்! ஆக மொத்தம் மாதத்தில் 500 ரூபாய் படத்திற்கு என்று தண்டம் அழுவேன்! அதே நேரத்தில் காவிரி பிரச்சினைக்காக விவசாயிகளை நினைத்து வருத்தப்பட்டு அஜித்தோ, விஜயோ, கமலோ, ரஜினியோ இது சம்பந்தமாக என்ன சொன்னார்கள் என்று விவாதம் செய்து நேரத்தைக் கழிப்பேன்! இணைய புலி நான் தான் என்று facebookஇல் இரண்டு status போட்டு like விழுந்ததும் தூங்கி விடுவேன்! இது ஒரு நிலை! இழிந்த மயிரைப் போன்ற நிலை!
இப்படித் தானே என் நிலை இருக்கிறது! நமக்கென்று உள்ள பாரம்பரியம் நமக்கு தெரியுமா? எத்தனை வகையாக நீர் நிலைகளை நம் முன்னோர்கள் பிரித்திருக்கிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்? பிங்கலந்தை, சூடாமணி, நாம தீப நிகண்டு குறிக்கும் நீர்நிலைகளை அகழி(Moat) முதல் புட்டைக்கிணறு(Well with Water Lift) வரை வரிசைபடுத்துகிறார்கள்.
1. அகழி(Moat)
2. அருவி(Waterfall)
3. ஆழிகிணறு(Well in Sea shore)
4. ஆறு
5. இலஞ்சி(Reservoir for drinking and other purposes)
6. உறைகிணறு(Ring Well)
7. ஊருணி(Drinking Water Tank)
8. ஊற்று(Spring)
9. ஏரி(Irrigation Tank)
10. ஓடை(Brook)
11. கட்டுக்கிணறு(Built-in-well)
12. கடல்(Sea)
13. கண்மாய்(Irrigation Tank)
14. கலிங்கு(Sluice with many vent ways)
15. கால்(Channel)
16. கால்வாய்(Supply Channel to a Tank)
17. குட்டம்(Large Pond)
18. குட்டை(Small Pond)
19. குண்டம்(Small Pool)
20. குண்டு(Pool)
21. குமிழி(Rock-cut-well)
22. குமிழி ஊற்று(Artesian Fountain)
23. குளம் வகை 1 (Bathing Tank)
24. குளம் வகை 2 (Irrigation Tank)
25. கூவம் (Abnormal Well)
26. கூவல்(Hollow)
27. கேணி(Large Well)
28. சிறை(Reservoir)
29. சுனை(Mountain Pool)
30. சேங்கை(Tank with duck weed)
31. தடம்(Beautifully Constructed Bathing Tank)
32. தளிக்குளம்(Tank surrounding a Temple)
33. தாங்கல்(Irrigation Tank )
34. திருக்குளம் அல்லது புஷ்கரணி(Temple Tank)
35. தெப்பகுளம்(Temple Tank with Inside pathway along parapet walls)
36. தொடுகிணறு(Dig Well)
37. நடைகேணி(Large Well with Steps on one side)
38. நீராடி அல்லது நீராழி(Bigger Tank with Center Mandapam)
39. பிள்ளைக் கிணறு(Well in middle of a tank)
40. பொய்கிணறு(Well with bubbling spring)
41. பொய்கை(Lake filled flowers like Lotus)
42. மடு(Dangerous dig in river)
43. மடை(Small sluice with single ventway)
44. மதகு(sluice with many ventways)
45. மறுகால்(Surplus Water Channel)
46. வலயம்(Round Tank)
47. வாய்க்கால்(Small Water Course)
48. வாவி(Stream)
49. புனற்குளம்(Tank of Rain Water)
50. புட்டைக் கிணறு(Well with Water Lift)
இப்படி வகைப்படுத்திய பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறை என்பது ஏற்கனவே இருக்கக்கூடிய சமூகத்தை மேலும் பண்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால் நாம் மீண்டும் மிருக நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகம் வலுக்கிறது, இந்த 50 வகைப்பாட்டில் எவ்வளவு மிச்சம் இருக்கிறது? எவ்வளவு விட்டு வைத்திருக்கிறோம்? நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் தெரிகிறதா? நவீன தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டி கொள்கிறோமே, என்ன கிழித்து விட்டோம் என்று பெருமை கொள்வது? மூன்று நாள் மழை தொடர்ந்து பெய்தால் இப்படிப்பட்ட நிலைமை,
இயற்கை நம்மைப் பார்த்து நகைக்கிறது மழையாக! அதுவும் குறுநகை தான்! அதற்கே இப்படி ஆகி விட்டோம்!
- தொடரும் மழை...