Tuesday, November 17, 2015


மழையே! நீ வாழ்க! பகுதி - 2


இதைக் குறிப்பிடும் போது 5 வருடங்களுக்கு முன் "தமிழர் பண்பாட்டில் நீர்" என்ற புத்தகத்தை படித்தது நினைவுக்கு வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வில் நீர் எந்த அளவு பின்னிப் பிணைந்துள்ளது என்று அந்த புத்தகத்தில் ஆசிரியர் ந.ஜெ. சரவணன் வரிசைப்படுத்தி இருப்பார்,

குழந்தை பிறப்பு சடங்கில் சர்க்கரை நீர் ஊற்றுதல்,

பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டு(மஞ்சள், வேப்பிலை, அருகம்புல் கலந்த நீரை இரும்பு ஜல்லடையை வைத்து ஊற்றுதல்)
திருமண சடங்குகளில் (கை நனைத்தல், நலுங்கு வைத்தல், தாரைவார்த்துக் கொடுத்தல், பெற்றோருக்கு பாதபூஜை செய்தல், முளைப்பாலிகை விடுதல், நீரிட்ட செம்புகுடத்தினுள் மோதிரம் தேடுதல்)
ஆரத்தி எடுத்தல்,
ஆடிபெருக்கை முன்னிட்டு தாலி கோர்த்தல்,

வளைகாப்பு சடங்கின் போது ஆரத்தி எடுத்தல்,

இறப்பு நிகழும் போது இறந்தோரை குளிப்பாட்டுதல்,
தீட்டு கழித்தல்,
எள்ளுடன் நீர் இறைத்தல்,
குடம் சுமத்தல்,
கருமாதி செய்தல்,
சாம்பல் கரைத்தல்,
திதி கொடுத்தல்

என்று ஒவ்வொரு நிகழ்விலும் நீர் முக்கிய பங்காற்றுகிறது. 

சரி, ஆறுகளை எடுத்துக் கொண்டால், 
"கோள் நிலைதிரிந்து கோடை நீடினும் 
 தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை" என்று சாத்தனார் ஏற்றிய காவிரியும், 

"உலகு புரந்தூட்டும் உயர்பே ரொழுக்கத்து 
 புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி 
 வையை என்ற பொய்யாக் குலக்கொடி" என்று இளங்கோ அடிகள் போற்றிய வையையும், 

"கல்பொருது இறங்கும் மல்லல் பேராறு" என புகழ்பெற்ற தன்பொருணையாம் தாமிரபரணியும் பாயும் நாடு நம் நாடு.

அடையாறு, கூவம், செய்யாறு, பாலாறு, கெடிலம், பெண்ணையாறு, கொசஸ்தலையாறு, கோடகனாறு, கோமுகி, மணிமுத்தா நதி, மோயாறு, சிறுவாணி, ஆழியாறு, பவானி, அமராவதி, நொய்யல், காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு, வெண்ணாறு, வெட்டாறு, பச்சையாறு, பெரியாறு, வைகை,மஞ்சளாறு, வைப்பாறு, நம்பியாறு, தாமிரபரணி, மணிமுத்தாறு, கடனா நதி, இராம நதி, குண்டாறு, கருப்பா நதி,  பச்சையாறு, பழையாறு, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், எவ்வளவு ஆறுகள், எவ்வளவு ஏரிகள், எவ்வளவு அருவிகள், எவ்வளவு நீர்வளம் தமிழ்நாட்டில், விட்டு வைத்திருக்கிறோமா?

ஆனால் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தலைமுறை எப்படிப்பட்ட தலைமுறை? யோசித்துப் பார்த்தால் 
ஆற்றிலிருந்து மணலை எடுத்து ஏரி நிலத்தில் கட்டிய வீட்டிற்கு குளத்தை அழித்து உருவாக்கிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் தலைமுறை எங்கள் தலைமுறை! இன்றைய தமிழகத்தின் பேருந்து நிலையங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்டதாகவே இருக்கிறது. ஐயப்பன்தாங்கல், பேராவூரணி, இலஞ்சி, வத்திராயிருப்பு, முடிவைதானேந்தல், இளையரசனேந்தல் என்று பெயரிலேயே நீர்நிலைகளை தாங்கிய ஊர்களின் பெயர்க் காரணம் அறிவதை விடுத்து, வேதாளம், புலி, தூங்காவனம் அடுத்து வரவிருக்கும் கபாலி என படங்களின் பெயர்க்காரணங்களை ஆராயும் அரிய தலைமுறை எங்கள் தலைமுறை!  ஒன்று வாழி பாடுவது, இல்லை வசை மாரி பொழிவது என்று வாழும் தலைமுறை எங்கள் தலைமுறை! இப்படி எனக்கு நானே சொல்லிக் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன! ஆனாலும் அப்படியே வாழ்ந்து போய் விட முடியாது!

இங்கு சென்னையில் அடையாற்றில் வரும் வெள்ள நீரை இன்று ஆச்சரியத்துடன் பார்த்த நபர்களில் நானும் ஒருவன், விளையாடுகிறது நதி! அதன் அசுர பாய்ச்சல் அச்சத்தைத் தருகிறது. ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கி விட்டு செல்கிறது.  காலம் காலமாக அடக்கி வைத்த கோபமோ என்னவோ? காரணம் இல்லாமல் இல்லை, ஆறு நகரத்தில் நுழைந்து வெளியேறுகிறது, உண்மையில் அது நகரத்தில் நுழையவில்லை, நரகத்தில் தானே நுழைகிறது,  பெரு நிறுவனங்கள் முதல் தனி மனிதர்  வரை  எல்லோருமே அந்த ஆற்றை ஏகபோகமாக குப்பைகளை, கழிவுகளை கொட்டும் இடமாக ஆக்கிவிட்டு அதன் பரப்பை சுருக்கி விட்டு பிறகு ஐயோ! ஐயோ!! குய்யோ, முறையோ!! என்று அலறினால் என்ன பலன் கிடைக்கும்? அதன் விளைவை இப்பொழுது  அனுபவிக்கிறோம், 

தமிழில் "கொண்டல்" என்றொரு சொல் உண்டு.  நம் முன்னோர்கள் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றை அப்பெயரிட்டு அழைத்தார்கள்,  தமிழகத்திற்கு அதிக மழையை தருவது கிழக்கிலிருந்து வீசும் வடகிழக்கு பருவக்காற்றே என்றும், அதிகபட்சம் 25 நாட்கள் தான் மழை நாட்கள் என்றும் "தமிழக பாசன வரலாறு" என்ற நூலில் படித்ததுண்டு.  25 நாட்கள் மட்டும் பெறும் மழையை வைத்து ஒரு ஆண்டை சமாளிக்கக்கூடிய அளவு நீர் சேமிக்கும் நிலைகளை வைத்திருக்கிறோமா?


- தொடரும் மழை...

No comments:

Post a Comment