"காவிரி செய்யும் பயணம் காலத்தே உழவர் வாழ்க்கை சிறக்கச் செய்யும்! மனிதர் நம் பயணமோ என்ன செய்யும்?"
இருந்தாலும் ஆசை காரணமாக,சங்க காலம் முன்பிருந்தே இடைவிடாத பயணம் செய்பவளான காவிரியை வணங்கி நம் இரண்டாவது பயணத்தை ஆரம்பிக்கிறேன்
.
இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள கொடைகள் எண்ணிலடங்காதவை. நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் வெட்டவெளி(வானம்) என்ற ஐந்து பெரும்பிரிவுகளில் தமிழ்மரபு இவற்றைப் பிரிக்கிறது. இவற்றில் நீரின் முக்கியத்துவம் வார்த்தைகளில் அடக்கிவிடக்கூடிய ஒன்று அல்ல. "நீரின்றி அமையாது உலகு" என்ற வாக்கியத்தின் மூலம் இதனை நாம் அறியலாம்.
நீர் நமக்கு வான் மழை, ஊற்றுக்களில் பிறப்பெடுக்கும் ஆறுகளினால் கிடைக்கப் பெறுகிறது. அப்படிக் கிடைக்கும் நீரை நாம் சரிவரக் கையாள்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில் 'இல்லை' என்பது தான்.
வடஇந்தியாவில் பாயும் பெரும்பாலான ஆறுகளுக்கு இமயமலை ஆதாரமாக இருக்கின்றது. இமயமலையின் தட்பவெப்ப நிலை குளிராகவே இருப்பதால் பனிக்கட்டி அடுக்குகள் இடைவிடாது உருவாகிக் கொண்டே இருப்பதால் அதிலிருந்துப் பிறப்பெடுக்கும் கங்கை போன்ற ஆறுகள் வற்றாத ஜீவ நதிகளாகவும் அளவில் மிகப்பெரியவையாகவும் உள்ளன.
ஆனால் தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆறுகள் அளவில் ஒப்பிடும்போது மிகச் சிறியவையாகவும் ஓடும் பரப்பளவு குறைவாகவும் உள்ளது. மேலும் தமிழ்நாடு வெப்பம் மிகுந்த பகுதியாகும். எனவே இருக்கின்ற நீர்வளத்தை எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகின்றது.
அது சோழர்கள் காலத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ள தோன்றியது. அதற்காகவே இந்த பயணம். பயணம் என்று சொல்வதை விட பயணங்கள் என்று சொல்லலாம். காரணம், இதற்காக மூன்று முறை பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் முதலிய ஐந்து மாவட்டங்கள், 800 கிலோமீட்டருக்கும் மேலான தொலைவு பயணம், ஒரு ஆறு, அதன் கிளை ஆறுகள், பழமையான அணைக்கட்டு ஒன்று, இரண்டு ஏரிகள், முக்கியமான தீர்த்தம் ஒன்று என்று பலப்பல விசயங்கள் நாம் பார்க்க போகின்ற இடங்கள் நிறைய நிறைய வர இருக்கின்றன. இது என்னளவில் மிகவும் நீண்ட மற்றும் நெடிய பயணம் ஆகும்.
தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் முதலிய ஐந்து மாவட்டங்கள், 800 கிலோமீட்டருக்கும் மேலான தொலைவு பயணம், ஒரு ஆறு, அதன் கிளை ஆறுகள், பழமையான அணைக்கட்டு ஒன்று, இரண்டு ஏரிகள், முக்கியமான தீர்த்தம் ஒன்று என்று பலப்பல விசயங்கள் நாம் பார்க்க போகின்ற இடங்கள் நிறைய நிறைய வர இருக்கின்றன. இது என்னளவில் மிகவும் நீண்ட மற்றும் நெடிய பயணம் ஆகும்.
சோழர்களின் காலம் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை. செப்பேடுகள், கல்வெட்டுகள் மற்றும் சோழர்கள் காலத்தில் வெளியிடப்பட்டக் காசுகள், கட்டப்பட்டக் கோயில்கள், பாடப்பட்ட பாடல்கள், மெய்க்கீர்த்திகள் இவைகளின் துணை கொண்டு அவர்களின் வரலாற்றை தொல்பொருள்ஆய்வுத்துறை வல்லுனர்கள், கற்றுஆய்ந்த பெரியோர்கள் பலர் வெளிக் கொணர்ந்துள்ளனர். அவற்றின் துணை கொண்டு பார்க்கும்போது சோழர்களின் அறிவுத் திறம், ஆட்சியமைப்பு முறை, கலைத் திறன், போர்த் திறன் மற்றும் கட்டிடக் கட்டமைப்புத் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
அவை எல்லாவற்றையும் பற்றித் தனித்தனியே அறிந்து கொள்ள முயற்சிசெய்தால் நமக்கு இந்த ஒரு பிறவி காணாது. ஏதோ ஓடும் ஆற்றில் ஒருதுளி நீர் பருக முயற்சி செய்யும் எறும்பை போல நானும் முயன்று பார்க்கிறேன். இது புள்ளிவிவரங்களையும், கல்வெட்டு செப்பேடுகளையும் பற்றிக் கூறக்கூடிய அளவிற்கு ஆழ்ந்த நுட்பம் மிக்கக் கட்டுரை அல்ல. நானும் தொழில்முறையான வரலாற்று வாசிப்பாளன் அல்ல. என்னால் இயன்றவரையில் நான் பெற்ற அனுபவத்தை உண்மையாக பல்வேறு தொகுப்புகளுடன் ஒப்பிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டி திருத்த வேண்டுகிறேன்.
சோழர்களின் கட்டுமானத் திறனை நினைக்கும்போது எல்லோருக்கும் நினைவிற்கு வருவது ராஜராஜேஸ்வரம், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் போன்ற கோயில்களே. அவற்றையும் தாண்டி மக்கள் நலனுக்காக அவர்கள் வெட்டி சென்ற ஏரிகள், கட்டுவித்த அணைகள் ஆகியவைகள் கூட இன்றளவும் நிலைத்து பயனளித்து வருகின்றன.
அவற்றுள் கரிகால் பெருவளத்தான், ஆதித்தசோழன், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய மாபெரும் மன்னர்கள் ஆட்சியின்போது நிறைவேறி இன்றும் பயனளிக்கும் நீர் மேலாண்மை பணிகளில் முக்கியமான சிலவற்றை நேரில் சென்று பார்வையிட போகிறோம்.
ஆறுகள்
நாகரிகங்களின் தொட்டில் எனப்படுவது ஆறுகளின் கரைகளே. ஆறுகளின் கரையில் உயிர்த்தெழுந்த நாகரிகங்கள் பலப்பல.
ஆதியில் காட்டில் மிருகத்தைப் போல சுற்றிக்கொண்டிருந்த மனிதன் ஆற்றுச் சமவெளிக்கு வந்த பின்னரே படிப்படியாக மனிதன் என்ற நிலையை அடைந்தான். விவசாயம் வளர்ந்தது. ஊர்கள் தோன்றின.
நைல் ஆற்றங்கரையோரம் வளர்ந்த எகிப்திய நாகரிகம், யூப்ரடிஸ் டைக்ரிஸ் நதிகளால் வளர்க்கப்பட்ட சுமேரிய நாகரிகம், மஞ்சள் நதியோரம் விளைந்த சீன நாகரிகம், சிந்துச் சமவெளி நாகரிகம், டைபர் ஆற்றின் மடியில் தவழ்ந்த ரோமானிய நாகரிகம், அவ்வளவு ஏன் இவை எல்லாவற்றிற்கும் தொன்மையாகக் கருதப்படும் கடல்கொண்ட லெமூரிய நாகரிகம் கூட பக்றுளியாற்றின் கரையில் வளர்ந்தது என்பர், இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
காவிரி - சிறு குறிப்பு
அவ்விதம் தமிழகத்தை வளப்படுத்திய ஆறுகளில் குறிப்பிடத்தகுந்தவள் காவிரி. காவிரியை தவிர்த்து நாம் சோழர் கால நீர் மேலாண்மை பணிகளை அறிய முடியாது.
"காகம் விரிக்க பாய்ந்தவள் காவிரி", "காடு செழிக்க விரிந்தவள் காவிரி", "கவேர முனிவரின் மகள் விஷ்ணுமாயை தான் காவிரி" என்று அவள் பெயருக்குப் பல காரணங்கள்.
காவிரி மூன்று நாடுகளை கடந்து சோழநாட்டிற்கு வருகிறாள்.
காவிரி வெளிப்படுவது குடகு நாட்டில், சிறு குழந்தையை போல குதித்து தவழ்ந்து வருவது மைசூர் மண்ணில், பிறகு விளையாடுவது கொங்கு நாட்டில். அதன் பிறகே தஞ்சை நோக்கி பயணம் செய்கிறாள்.
குடகு நாட்டில்:
காவிரியின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகில் தான். சைய மலை, பிரம்மகிரி, பிரம்ம கபாலம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மலையில் 30 அடி சதுர குளத்தில் இரண்டரை அடி ஆழமே உள்ள இடத்தில பொன்னி தோன்றுகிறாள்.
பாக மண்டலத்தில் அமைதியாக வெளிப்படும் காவிரியோடு கனகா என்னும் ஆற்று நல்லாள் சேர்கிறாள். பிறகு கிழக்கு நோக்கிய பயணத்தில் அடையும் இடம் சித்திரபுரம், சற்றே வலப்புறம் திரும்பி செல்லும் ஊர் பிரேசர்பேட்டை, அங்கிருந்து கண்ணேகால் அடைகிறாள். பிறகு இருபது மைல் தொலைவில் அடுத்த நாடாகிய மைசூர் நாடு வருகிறது.
மைசூர் நாட்டில்:
மைசூரில் ஹாசன் ஜில்லாவில் வலஞ்சுழித்து ஓடி வருகிறாள். அடுத்து சுஞ்சின்கட்டே என்ற அருவியாக பாய்கிறாள். ஆழம் 60 முதல் 80 அடி வரை ஏற்படுத்துகிறாள். தொடரும் வடக்கு நோக்கிய பயணத்தில் திப்பூர் அருகே வடக்கிருந்து சேரும் ஆறு ஹேமாவதி, அதன் பிறகு பைரபூர் அருகே லக்ஷ்மணதீர்த்தம் சேர்கிறது.
இரு நதிகள் சேர்ந்து விட்டதால் அவளின் பிரம்மாண்டம் வெளிப்பட ஆரம்பிக்கிறது, அதன் முதல் வெளிப்பாடு "கிருஷ்ணராஜ சாகரம்" என அழைக்கப்படும் மிகப்பெரிய நீர்த்தேக்கம். அதன் மறுபகுதியில் இருப்பதே கண்ணம்பாடி அணைக்கட்டு.
பின் கிழக்கு திசை திரும்பும் காவிரி வடக்கு தெற்காக இரண்டாக பிரிகிறாள். கௌதம ஆசிரமம் அருகே காவிரியின் வடகிளையில் லோகபவானி காவிரியோடு ஒன்றாகிறாள். தென்கிளையாக செல்லும் காவிரி எட்டுக்கல் தூரம் கடந்து வடகிளையோடு சங்கமிக்கிறாள். பிறகு தென்கிழக்காக பாய்பவள் நரசிபூர் அருகே கப்பினியை தன்னோடு சேர்த்துக் கொள்கிறாள். அடுத்தும் கிழக்கே ஓடி, தென்புறம் திரும்பும் அவள் பெருமைப்படுத்தும் ஊர் தலக்காடு என்ற சரித்திர பிரசித்தி பெற்ற ஊர். அடுத்து காவிரியோடு ஸ்வர்ணாவதி கலந்து விடுகிறாள்.
அடுத்து வடகிழக்கு செல்லும் அவள் வடக்காகப் பாய்கிறாள். என்ன நினைக்கிறாளோ, இரண்டு பிரிவாக பிரிந்து அருவியாக பாய்கிறாள். மேற்கு கிளை ககனசுகி என அழைக்கபடுகிறது. கிழக்கு கிளை பார்சுகி எனப்படுகிறது. அதிலிருந்து வெளிப்படும் நீர்வீழ்ச்சியே சிவசமுத்திரம். 3 மைல் ஓடி 250 அடி ஆழ அருவிகளை வெளிப்படுத்தும் அவள் வடகிழக்காக ஒன்று கூடுகிறாள்.
தொடரும் அவள் கிழக்காக ஓடி குறுகிய மலை குடைவில் ஓடி வருகிறாள். வடக்கிருந்து வரும் இருவர் அவளோடு சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் பெயர் ஷிம்தா, அர்க்காகி.
அடுத்து மேகதாடு என்ற 12 அடி அகல மலை சரிவில் அவள் வரும்போது ஆடு தாண்டக்கூடிய அளவே அகலமாக இருப்பதால் "ஆடு தாண்டும் காவிரி" என அழைக்கபடுகிறாள்.
அங்கிருந்து அவள் கொங்கு நாட்டை நோக்கி வருகிறாள்..
கொங்கு நாட்டில்:
தமிழகத்தில் அவள் சந்திக்கும் முதல் நாடு கொங்கு நாடு, "ஹொகேனக்கல்" என்ற அருவியாக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். அவளை எதிர்கொண்டு வரவேற்பவர்கள் சின்னாறு, சனத்குமார நதி, தோப்பூராறு. பிறகு திருச்செங்கோடு ஓமலூர் தாலுகாவில் வடக்கு தெற்காக பாய்கிறாள். அடுத்து சீதாமலை, பாலமலை இடையே ஏற்படுத்தப்பட்டது தான் மேட்டூர் அணை.
மேட்டூரிலிருந்து விடைபெறும் அவள் ஈரோடு வருகிறாள். ஈரோடு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே காவிரி ரயில் நிலையம் தாண்டி 450 கஜம் நீளமுள்ள பாலம் அவள் மீது கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து தென்கிழக்காக செல்பவள் கோயம்புத்தூர் அருகே நொய்யல் ஆற்றுடன் கலக்கிறாள். நொய்யல் கிழக்கிருந்து அவளிடம் வருகிறது. அடுத்து வடக்கிருந்து திருமணிமுத்தாறு கலக்கிறது.
அங்கிருந்து நேர்கிழக்காக அவள் வருவது ***** \ சோழ நாடு \ ***** நோக்கி...
இனி சோழர்கள் நாட்டிற்கு செல்லலாம், வாருங்கள் நண்பர்களே!
சோழநாட்டிற்கு "பொன்னி நாடு" என்ற சிறப்புப்பெயர் உண்டு. காரணம், பொன்னி என்று அழைக்கப்படும் காவிரி. அவள் வளைந்து நெளிந்து ஓடி தன் கரங்களால் "சோழநாடு சோறுடைத்து" என்ற வாக்கியத்தை எழுதி உயிர்கொடுக்கிறாள்.
பொன்னியின் செல்வன் படித்த யாரும் பொன்னியின் பெருமையை மறக்க முடியுமா?
- தொடரும் ஓட்டம் -
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete