Monday, June 22, 2015

தமிழரின் கடல்சார் அறிவு - தொன்மை முதல் இன்று வரை - பகுதி 1

நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்! இந்த முறை நம் எண்ண அலைகள் நனைக்கும் பகுதி கடல்!


கடல், ஆழி, சலதரம், பெருநீர், பாழி, தொன்னீர், கார்கோள், ஓலம், கயம், வாரிதி, நெறிநீர், பரப்பு, பாரி, வாரிதி, ஓதவனம், வலயம், பிரம்பு, தோழம், திரை  என்று எத்தனை எத்தனை பெயர்கள்! எவ்வளவு பிரமாண்டம்! ஏறக்குறைய புவிப் பரப்பில் 70 விழுக்காடு இருக்கும் கடல் அன்னையின் துணை இன்றி இவ்வுலகம் நிலைத்து இருக்க முடியாது.  அவளின் இயல்பை பல்வேறுபட்ட கோணங்களில் வரும் பகுதிகளில் பார்க்கப் போகிறோம்!


ஆழியாகிய அவளை நம்பி வாழும் மீனவர் சமுதாய பெருமக்கள், கடலோடிகள், சுற்றுச்சூழலில் அவளின் பெரும்பங்கு, அவளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள்,  அறிவியல் ரீதியான அணுகுமுறை என ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

அதன் முதல் முயற்சியாக நாம் சந்திக்கப் போகும் முதல் பெரியோர் ஐயா திரு. ஒரிசா பாலு அவர்கள். அவரைப் பற்றி சொல்வதென்றால் கடலைப் புட்டியில் அடைக்கச் செய்யும் முயற்சி போல.  தன்னலம் மறந்து ஆழி தொடர்பான ஆராய்ச்சியில் தன்னையே கரைத்துக் கொண்டவர். கிட்டத்தட்ட 33 துறைகளை ஒருங்கிணைத்து  அறிவியல் ரீதியாக மரபு சார்ந்த தொன்மைகளை வெளிக் கொணர தொடர்ந்து வினையாற்றி வருபவர். கடல் சார்ந்த ஆராய்ச்சி, மொழியியல் துறை, கல்வெட்டியல், பல்வேறு இனங்களின் பாரம்பர்ய அறிவு பற்றிய ஆய்வு, தமிழரின் தொன்மை பற்றிய ஆதாரப்பூர்வமான தரவுகள், ஆலிவர் ரிட்லி போன்ற கடல் ஆமைகளின் பயணம், சங்க காலத்திற்கு முன்பிருந்து தற்சமயம் வரையிலான தமிழகக் கடலோடிகள் பற்றிய ஆய்வு, குமரிக்கண்டம் பற்றிய உறுதியான தரவுகள் என்று அவரின் ஆராய்ச்சிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.


உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லையென்றும் கூறும் துலாக்கோல் போன்றவர்,  தொன்மையான தமிழர் மரபு  ஆராய்ச்சி என்று எடுத்துக் கொண்டால் அவரின்றி அது முழுமை பெறாது.  வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு பேசும் வெற்றுக்  கூச்சலாளர்கள், தன் சுயநலத்திற்கு மொழியைப் பயன்படுத்துவோர் கூட்டத்தையேப்  பார்த்து சலித்துப் போன நாம் அறிவு சார்ந்து செயல்படும் அவரின் நேர்காணலை கீழே காணலாம்.




ஐயா! வணக்கம்! உங்களைப் பற்றி சொல்லுங்க!
நான் அதிகமாக பணி புரிந்த ஒரிசாவோடு சேர்த்து என் பெயர் "ஒரிசா பாலு" என அறியப்பட்டாலும் நான் பிறந்தது 1963 ஏப்ரல் 7ல் திருச்சி உறையூரில் தான். அப்பா பெயர் சிவஞானம், அம்மா பெயர் ராஜேஸ்வரி, எனக்கு மூன்று அக்காக்கள், ஒரு தம்பி. இப்போ என் மனைவி மகன் மகளோடு சென்னையில் தான் வசிக்கிறேன். என் ஆய்வை எடுத்துக் கொண்டால் பல்வேறு கோணங்களை உள்ளடக்கியது, உங்களுக்கே தெரியும், நான் கடல் ஆய்வு மட்டும் செய்பவனல்ல. கடல் சம்பந்தமாக மட்டும் 33 துறைகள், அதில்லாமல் பல துறைகள் என் ஆய்வில் உள்ளன. கடலில் மீன்பிடித்தல் மட்டும் இல்லாமல் வணிகம், கனிம வளங்களை தேடுதல், எண்ணெய் வளங்களை கண்டறிதல், தட்பவெட்ப மாற்றங்கள், சங்கு, முத்து, ஆழி, மட்டி  மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வு, கடலில் உள்ள மருத்துவ குணம் பொருந்திய தாவரங்கள் பற்றிய ஆய்வு, மேலும் கடலில் ஆறுகள் கலக்கும் கழிமுக பகுதி பற்றிய ஆய்வு, பல்லுயிர் ஓம்பும் கடலின் தன்மை பற்றிய ஆய்வு, மிக முக்கியமாக கடல் நீரோட்டங்கள் பற்றிய ஆய்வு என சொல்லிக் கொண்டே போகலாம். நீரோட்டங்களைப் பற்றி சொல்லும்போது அவை மீன்கள், ஆமைகள், திமிங்கலங்கள் இவற்றை மற்றும் கடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லாமல் மனிதர்களின் கடல்வழி பயணத்தையும் எளிதாக்குகிறது.  கிட்டத்தட்ட மனித இனத்தையும் உலகம் முழுவதும் பரவ செய்திருக்கிறது. மனிதர்கள் கடல் ஆமைகளை பின்பற்றி கடல் வழி பயணம் மேற்கொண்டனர்.இப்படி பல்வேறு நிலைகளை ஆராய்வதே எனது நிலை.

சரி, "ஒரிசா பாலு B+"  என்றே உங்களை அழைக்கிறார்கள், ஏன்  B+?
நம் மக்களின் வரலாறை தேடக் கூடிய சூழல் எனக்கு எனது பல்வேறு பயணங்கள் மூலமாக அமைந்தது.இந்த தேடலில் நேரடியாகவே பல்வேறு உயிரிழப்புகளைப் பார்க்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. உதாரணமா ஒரிசாவில் இருக்கும்போது  "சூப்பர் சைக்ளோன்" வந்து நிறைய பேர் இறந்ததை பார்க்கும் நிலை வந்தது. அதே போன்று  சாலை விபத்துகளில் பலரின் உயிரிழப்புகள், இப்படி பார்த்தபொழுது உடனடி இழப்பாக நான் பார்த்தது இரத்த இழப்பு,  இது போன்ற சமயங்களில் உடனடியாக ஒருவரின் இரத்த வகையை தேடிக் கண்டுபிடிக்க காலம் அதிகம் எடுத்துக் கொள்வதையும் பார்த்தேன் 2002லிருந்தே  இந்த மாதிரி அதிகம் பார்த்தேன். 2005ல் இரண்டு சம்பவங்கள் நடந்தது. ஒரு பையனுக்கு 30 பாட்டில் "A+" பிரிவு இரத்தம் தேவைப்பட்டது. காரணம் அவனுக்கு ஹீமோபிலியா என்ற இரத்த குறைபாடு வகை நோய் இருந்தது. அவன் உடம்பில் இருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தால் கொட்டிக்கொண்டே இருக்கும். அதற்காக நாங்கள் அலைந்த அனுபவம் மறக்க முடியாது, அதே போன்று எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு குழந்தைக்கு "AB-" இரத்தம் தேவைப்பட்டது. எங்களுக்கு தெரிஞ்சவங்களிடம் இருந்தும் உரிய நேரத்தில் சேர்க்க முடியாததால் அந்த குழந்தை இறந்தது ரொம்ப வலியைக் கொடுத்தது. இந்த அனுபவங்கள் தான் என் பெயரை "ஒரிசா பாலசுப்ரமணியம்" என்பதிலிருந்து "ஒரிசா பாலு B+" என்று இரத்த வகையோடு சேர்ந்து போட வைத்தது.  மேலும் "BLOOD GROUP BEHIND YOUR NAME" என்ற கருத்தை முன்வைக்க ஆரம்பித்தேன். எனது நண்பர்களுக்கும் அதை பற்றிக் கூறினேன். அதன் விளைவாக யாருக்கு எந்த வகை இரத்தம் தேவைப்பட்டாலும்  அதற்கு ஏற்பாடு செய்து குறுகிய காலத்தில் இரத்த இழப்பு இல்லாமல் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.

இன்னும் சொல்லப் போனா  ஒரு மனிதனுக்கு அவன் பெயருக்கு பின்னால் அவன் படிப்போ, சாதிப் பெயரோ, அவன் ஏழை பணக்காரன் என்ற குறிப்போ இருப்பதை விட அவன் பெயருக்கு பின்னால் அவனது இரத்த வகை இருந்தால் அதன் மூலம் அவனால் சமுகத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி வாழ வைக்க முடியும். அவனாலும் சமுகத்திற்கு நன்மை விளையும்.

மனதில் இருத்த வேண்டிய கருத்து!  இன்னொரு கேள்வி!  ஏன்  நமது நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?
 நாம் இந்தியா என்ற பெயரை நமது நாட்டிற்கு சொல்கிறோம், இந்த பெயர் எப்படி வந்தது? எங்கோ இருந்து  கிரேக்க இன வெள்ளை நிற மக்கள் நமது மக்களின் கறுப்பு நிறத்தை பார்த்து அதைக் குறிக்கும் கிரேக்க சொல்லான "இண்டி" என்ற வார்த்தையால் நம்மை அழைத்தனர்.  அதனால் தான் கறுப்பு நிற மக்கள் வாழும் பகுதியான இந்த பகுதி "இண்டியா" என்று குறிக்கப்பட்டது.பிறகு தான் "இண்டஸ் வேலி" என்று சொல்லப்படும் சிந்து பள்ளத்தாக்கை மையமாக கொண்டே இந்த சொல் வந்தது என்று கூற ஆரம்பித்தார்கள்.  உண்மையில் 1922ல் தான் இண்டஸ்  வேலி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னமே கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னமே "இண்டிகா" என்ற சொல் கறுப்பு நிற மக்களை குறிக்கும் சொல் இருந்துவந்து உள்ளது. கிரேக்கர்கள் அலெக்ஸாண்டருக்கு முன் கடல்வழியாக தான் இந்தியாவை வந்தடைந்தார்கள். அலெக்ஸாண்டருக்குப் பின் தான் நில வழி பயணம் மேற்கொண்டார்கள். அதன் பிறகு தான் "பட்டு வழி பாதை" மூலம் வந்தார்கள். அதனால் தான் சொல்கிறேன், அயோனியர், யவனர் என்று அழைக்கப்பட்ட மக்களாகிய கிரேக்க வெள்ளை நிற மக்கள், இந்தியாவின் கடற்கரையை வந்தடைந்த போது அங்கு இருந்த கறுப்பு நிற மக்களை பார்த்து சொன்ன சொல்லில் இருந்து தான் "இந்தியா" என்ற சொல் வந்தது.


சரி, ஏன் அவர்கள் அங்கிருந்து நடு நில கடலாகிய மத்திய தரைக் கடலில் இருந்து இங்கு வந்தார்கள், ஏனென்றால் ஏற்கனவே அவர்களோடு நமக்கு தொடர்பு உண்டு. அங்கு நம் ஆளுமையும் இருந்திருக்கிறது. கி.மு பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னமே பாண்டியா என்ற மன்னன் க்ரீட் என்ற தீவை ஆண்டிருக்கிறான் என்பதும், அங்கு பேசப்பட்ட மொழி திரமிளை என்பதும், அவன் வம்சம் "மீனோவன்" என்றும் பதிவாகி இருக்கிறது. நீங்க பார்த்திங்கன்னா க்ரீக், ரோம், எரித்ரியன் பகுதிகள் மற்றும்  சிரியன் பகுதிகளில் தமிழ் வணிகர்களின் ஆளுமை இருந்தது தெளிவாக பதிவாகி இருக்கிறது. கடல்வழி வணிகத்தில் இவர்கள் தான் முன்னோடிகள், இவர்கள் தான் பட்டுவழிப் பாதையையும், நில வழிப் பாதையையும் ஒருங்கிணைத்தார்கள். உலகில் மனிதர்கள் கடலை ஒட்டி வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழர்களுடைய பங்களிப்பு இருக்கிறது.


தமிழர்கள் இயற்கையை அணுகிய முறை? 



பொதுவாக சொல்லுவாங்க, முதல் புரிதல் வந்து எப்பிடி வந்ததுனா மனிதனுக்கு விலங்குகளைப் பற்றிய புரிதல் வந்த பிறகு தான் விலங்குகள் மூலமாக தாவரங்களையும், இயற்கையையும், தட்பவெப்ப நிலையையும் அவன் அறிஞ்சுகிட்டான் என்று பொதுவான ஒரு கோட்பாடு சொல்லுவாங்க, அந்தக் கோட்பாடு மட்டுமல்லாமல் பல கோட்பாடுகளும் நடந்த இந்த இடம் கடலை வெளியாக கொண்ட இந்த நிலம்.  நீங்க வரைபடத்தைப் பார்க்கிறப்ப இந்த நிலம், குறிப்பா தென்னாட்டு பகுதியில் இருக்கிற நிலம் முழுக்க முழுக்க கடல் சூழ்ந்த நிலம், நடுவுல வந்து மிக அழகாக மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரும், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரும் சூழ்ந்து பேரழகாக இருக்கிற நிலம்.   இந்த மலைத் தொடர்களுக்கும் கடலுக்கும் இடையில் வாழ்ந்த மக்கள், அவர்களின் புரிதல், அவர்கள் பெரும்பொழுது, சிறுபொழுதை எப்படி பார்த்தாங்க, ஒரு நாளை எப்படி ஆறு பகுதிகளாக பிரிச்சாங்க, வருடத்தை எப்படி ஆறு பகுதிகளாக பிரிச்சாங்க! அதே நேரத்தில் சூரியனுடைய வட சலவு, தென் சலவு எப்படி பார்த்தாங்க, பருவ மாற்றத்தை எப்படி புரிஞ்சுகிட்டாங்க, அதன் மூலம் வலசை பயணம் எப்படி போனாங்க, அந்த வலசை பயணத்திற்கு காரணமான நிலத்திலுள்ள  யானைகள், காளை மாடுகள், அதே மாதிரி வானத்தில் வலசை போகும் கொக்கு, அன்னம் போன்ற  பறவைகளையும், கடலில் உள்ள ஆமைகளின் போக்கையும் எப்படி புரிஞ்சுகிட்டாங்க, இப்படி பல கோணங்கள் இருக்குது.


குறிப்பாக நான் சென்ற இடங்களிலெல்லாம் கிடைத்த தமிழ் தொடர்பான தரவுகள், அதனுடைய மேலாண்மை,  இந்த மக்களின் திறன்  என்னை மேலும் உள்ளார்ந்து போக வைத்தது. நீங்க சொல்லும் தமிழ் என்கிற சொல், அந்த மொழியைக் கொண்டு போனவங்க யார்னு பார்த்தா "திரை மீளர்கள்" என்று சொல்லக்கூடிய கடலோடிகள், கடலோடிகள் என்ற வார்த்தையை விட உலக நாடுகள் முழுக்க ஒரு பெயர் நல்லா பதிவாயிருக்கிறது.  "திரை மீளர்", "திரமிளா" , "திரமிரா" இப்படி நிறைய சொற்கள் சொல்லலாம். உதாரணமா இப்ப கிரிட் தீவில் "திரமிளை" என்ற மொழி வழக்கில் இருந்திருக்கு. இலங்கையில் "திரமிரா" என்ற சொல் பதிவாகி இருக்குது. ஒரிசாவில் "திரமிளா" என்ற மன்னன் ஆட்சி நடத்தினதாக குறிப்பு இருக்குது. இந்த மாதிரி இந்த சொல், இந்த சொல்லுக்கு அடிப்படையான காரணம் இந்த நிலத்தில் பேசப்பட்ட மொழி, இதை கொண்டு சென்ற "திரை மேல் சென்று மீண்டவர்கள்"  என்று  ஆராயும் நிலை ஏற்பட்டது.  பொதுவாக ஆரம்ப காலத்தில் மனிதன் கடல் கடந்து போக பயப்பட்டான். காரணம், அதன் பிரமாண்டம், அந்த கடல் என்ன தன்மையானது, அதில் என்னென்ன இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது, அப்படி மனிதர்கள் இருந்த சூழ்நிலையில் கூட அந்த கடலில் மேல் நிறைய பேர் போய் இருக்காங்க, போனவங்க இறந்தும் போய் இருக்காங்க, கடலைத் தாண்டி வேறு நிலம் சென்று அங்கே வாழ்க்கையை கழித்தும் இருக்காங்க. இந்த மாதிரியான நிலையில் இங்கிருந்து அந்த கடலின் மேல் சென்று மீண்டும் வந்த திரைமீளர்கள் எந்த மாதிரியான பாதிப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பார்க்கணும்!


உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 22,000 தமிழ்ப் பெயர்கள் வழக்கில் இப்பவும் இருக்கு. இது தான் இந்த மக்களின் திறன், இவர்கள் வெறுமனே கடலோடிகள், மீன் பிடிக்கிறவர்களாக மட்டும் இல்லாமல் "திரை கடலோடியும் திரவியம் தேடு" "யாதும் ஊரே! யாவரும் கேளிர்" என்ற வாக்கியங்களுக்கேற்ப வாழ்ந்து இருக்காங்க. இவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் பிரிவினை பார்க்காமல் அந்த இடத்து மக்களோடு கலந்து அந்த மக்களுக்கு தங்கள் திறன்களை சொல்லிக் கொடுத்து இருக்காங்க!  இவர்களைப் பற்றிய தேடலில் மிக மிக அவசியமாக நான் கருதுவது இந்த மக்கள் யார்? இவர்களின் தனித்தன்மை என்ன? அது எப்படி உலகம் முழுவதும் இப்பவும் பயன்படுகிறது? இவர்களின் திணைக் கோட்பாடு என்ன? என்பது தான். உங்களுக்கு ஐவகை திணைகள் என்று சொன்னா கூட புரியாது. ஆனா திருக்குறளில் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும்" என்று வள்ளுவர் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கார் பாருங்க! இதில் "மணிநீர்" என்பது கடலைக் குறிக்கும்.  பெரும்பாலும்  என்ன பண்றோம்னா தமிழ் மொழியை இலக்கண, இலக்கிய உயர்வைக் கூறி அதை தெய்வ மொழி என்று சொல்லி விட்டுறோம்.

ஆனா என்னைப் பொறுத்தவரை தமிழ் என்பது வாழ்வியல் மொழியாகப் பார்க்கிறேன். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 120 மொழிகளில் தமிழோட ஆளுமை இருக்கு! இந்தோ-அரபிய மொழிகளில் கூட தமிழோட தாக்கம் இருக்கு. 14 பிற மொழிகளின் கலப்பு தமிழில் இருக்குது! எப்படி 14 அந்த மொழிகள் இங்கு வந்தது? இங்க யார் யார் நம்மை ஆட்சிபுரிய வந்தாங்களோ அவங்களோட மொழி தமிழோடு கலந்தது. இந்தி, உருது, பாரசிகம்,சமஸ்கிருதம், ஸ்பானிஷ், போர்ச்சுகீசு, பிரெஞ்ச், ஜெர்மன் என்று எல்லா மொழிகளும் கலந்து இருக்கு. அதனால் இப்போ இந்த மக்கள் பேசக்கூடிய மொழிவழக்கை வைத்து தமிழை எடைபோடக் கூடாது. தமிழுக்கு மிகப் பெரிய தன்மை இருக்குது. யோசிச்சு பாருங்க, ஒரு மொழியில் எப்படி 14 மொழிகள் கலக்க முடியும்? உலகம் முழுக்க தமிழின் தாக்கம் இருந்து, தமிழர்களின் இந்த மண்ணின் பெருமை அறிந்து வெவ்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இங்கே வந்து இருக்கலாம் இல்லியா! அது மட்டும் இல்ல! தமிழ்நாட்டின் தொன்மையை இப்போ குறித்து உள்ள படி குறிப்பிட்டு ஒரு எல்லைக்குள் கூற முடியாது. நாம் வாழும் இந்த பகுதி பற்றி கூற வேண்டுமென்றால் 1802ல் தான் கிழக்கிந்திய கம்பெனி இந்த நிலத்தை "மதராஸ் மாகாணம்" என்று பெயரிடுறாங்க! அப்போ இதன் எல்லை கிழக்கில் கர்நாடகாவிலிருந்து ஒரிசா வரை  பரந்து இருக்குது. அதன் பிறகு 1956 நவம்பரில் "சென்னை மாநிலம்" என்று மாறுது. பரப்பும் சுருங்குது. அது பிறகு 1969ல் மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு உயிரிழப்புகள் நடந்த பிறகு "தமிழ்நாடு" என்று பெயர் மாறுது. சரி, ஏன் தமிழ்நாடுன்னு பெயர் மாத்தினாங்க, தமிழ் மக்கள் வாழும் இடம் தமிழ்நாடு என்று  இலக்கியங்களில் பதிவாகி இருக்குது, அந்த அடிப்படையில் தான் பெயர் மாற்றம் ஆனது.

சரி, இந்த மக்களின் பின்புலம் என்ன? இவங்க எப்படி உலகை வென்றாங்க? நடந்தே சென்றார்களா? 
இல்லியே!  கடல் வழியா போனாங்க, உலகம் முழுக்க இவர்களின் பதிவுகள் இருக்குதே! அது ஏன் இப்போ தெரியவில்லை! அதற்கான முக்கிய காரணம் நமக்கு நமக்கான புவியியல் புரிதல் இல்லை, நமக்கு நம் நில அமைப்பைப் பற்றி தெளிவான அறிதல் இல்லை, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நில அமைப்பைப் பற்றி பேசும்போது கடல் எங்கு இருந்தது,  உள்ளே இருந்ததா? வெளியே இருந்ததா?  நிலப் பகுதி எங்க இருந்துது? அதை ஆராய்ந்து இருக்கோமா? நாம பூம்புகார் கடலில் மூழ்கியது பற்றி பேசுறோம், மாமல்லபுரத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியது பற்றி பேசுறோம், திருச்செந்தூரின் ஒரு பக்கம் கடலில் மூழ்கியது பற்றி பேசுறோம், அதே சமயத்தில கன்னியாகுமரி கடலில் நிலப் பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது பற்றி பல வகையாக பேசுறோம்,

குறிப்பா கன்னியாகுமரியிலிருந்து மடகாஸ்கர் பகுதி வரை கடலில் மூழ்கியிருக்கும் பகுதியை "லெமூரியா கண்டம்" என்றும், தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் "குமரிக் கண்டம்" என்றும் சொல்றோம். அதையே "கடல் கொண்ட தென்னாடு" என்றும் சொல்றோம். இவ்வளவு ஆளுமை நிரம்பிய இந்த இடத்தின் சிறப்பு என்ன? உலக மக்களே பயணம் செய்ய பயந்த கடலில் பயணம் செய்து கிழக்கையும் மேற்கையும் இணைத்த இந்த மக்களின் திறன் என்ன ? கடலோடிகளின் திறன் என்ன? இவங்க கடல் வழியா என்னென்ன கொண்டு போனாங்க? என்னென்ன கொண்டு வந்தாங்க? இவங்க எப்படி உலக மக்களுக்கு  நாகரிகம் கற்று கொடுத்தாங்க என்பது தான் நமது தேடல்.
                                                                                                             
                                                                                                                                         - தொடரும்

7 comments:

  1. Great work, Long live and serve the world, What you are saying is actually World history...

    ReplyDelete
  2. Waiting for 2nd part. Prem Shanmugam.

    ReplyDelete
  3. தங்களின் மேலான இந்த பணி தமிழுக்கும் தமிழருக்கும் உண்ணதமான மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட பெருமையை மீட்டெடுக்கும். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக அருமையான நேர்காணல்

    ReplyDelete