Sunday, August 30, 2015

மக்களுக்கான மருத்துவம் மஞ்சள் நகரிலிருந்து

ஆம், மக்களுக்கான மருத்துவம் மஞ்சள் நகரிலிருந்து(ஈரோடு) என்று குறிப்பிட்டு சொல்லக் காரணமாக ஒருவர் ஈரோட்டில் உண்டு. அவர் தான் ஐயா மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-08-2015) நண்பகல் நேரம் ஈரோட்டில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த ஒரு மணி நேரத்தில் உரையாடியதில் மனித வாழ்க்கையை பற்றிய பல கற்பிதங்களை உடைத்து புரட்டி போட்டது  போன்று இருந்தது அவரின் சொற்கள்.  ஆனாலும் அவர் அமைதி, இனிமை, மென்மையான பேச்சு, வயதில் சிறியவர்களிடமும் மரியாதையாக அணுகுதல் என்று கற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு குணங்களின் தொகுப்பாக தான் இருந்தார்.

அவரைப் பற்றி:
கிட்டத்தட்ட 5 வருட காலமாக ஈரோட்டில் Trust மருத்துவமனை, Cancer மருத்துவமனை, பாண்டிச்சேரியில் ஒரு மருத்துவமனை, பெங்களூரில் ஒரு மருத்துவமனை, தஞ்சாவூரில் Cancer மருத்துவமனை, ஊத்துக்குளியில் ஒரு மருத்துவமனை, இந்த மருத்துவமனைகளை எல்லாம் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்து அவற்றை நடத்தி வர உறுதுணையாக இருப்பவர் ஐயா ஜீவானந்தம் அவர்கள்.  வித்தியாசம் என்ன என்றால் இந்த மருத்துவமனைகள் எல்லாமே சமூகத்தின் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனைகள் என்பது தான் குறிப்பிடத்தக்கது .

இனி அவரோடு உரையாடியதில் கிடைத்த சில முத்துகளை பார்க்கலாம்.


ஐயா, இந்த Trust மருத்துவமனைகளை குறிப்பாக யாருக்காக தொடங்குகிறீர்கள்?

குறிப்பா நடுத்தர மக்கள், ஏன்னா அவங்க தான் மேலேயும் போக முடியாம, கீழேயும் போக முடியாம நிப்பாங்க.  பணக்காரங்க Private Hospital  போயிடுவாங்க! ஏழை மக்கள் Govt Hospital போயிடுவாங்க! நடுத்தர மக்கள் தான் இரண்டு இடத்துக்கும் போகாம என்ன செய்றதுன்னு தெரியாம இருப்பாங்க  So அவங்களையும், அடுத்து ஏழை எளிய மக்களையும் மையமா வச்சு தான் இந்த hospitals-ஐ தொடங்குறோம். 


இதற்கான contribution எப்படி  கிடைக்குது? எளிதாக இருக்குதா?

எதுவுமே ஆத்மார்த்தமா பண்ணினா நல்லபடியா நடக்கும்.  நாம ஒவ்வொருத்தரும் சமூகத்தில ஒரு அங்கம். எப்பிடி இந்த சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கிறமோ அப்பிடியே நாமளும் இங்க ஏதாவது கொடுக்கணும்! நோக்கத்தை புரிஞ்சுகிட்டு தானே வந்து நிலத்தை, பணத்தை கொடுக்கிறவங்க உண்டு. தங்கள் ஊரில் மக்களுக்கு அவர்களின்  பொருளாதார நிலைக்கு ஏற்ற தரமான மருத்துவ வசதி கிடைக்க விருப்பம் உள்ளவர்கள் தாங்களே contribute பண்ணி இருக்காங்க!  நாங்க தேவையான நிலம், பணம் கிடைத்தவுடன் எங்க Trust மூலம் மருத்துவமனை கட்டி கொடுத்து விடுவோம். Investment பண்றவங்களுக்கு அந்த பணத்தைத் திரும்பக் கொடுத்துடுவோம், என்ன, திரும்பக் கொடுக்க 2லிருந்து 3 வருட காலம் ஆகும்.  இந்த மாதிரி ஆரம்பிக்கும்போது நான் முதலில் என்னால் முடிந்த அளவில் பணத்தை முதலில் கொடுத்துவிட்டு அதன்பிறகு தான் மத்தவங்களிடம் கேட்பேன்!

சரி, மருத்துவமனை ஆரம்பித்து விடலாம், இதற்கான Doctors எப்படி கிடைப்பாங்க?

எளிது அப்படின்னு சொல்ல முடியாது.  இப்போ ஒரு டாக்டரோட பையன் டாக்டர்க்கு படிக்கிறான்னு வைங்க.  அவன் வரமாட்டான், ஏன்னா அவனுக்கு ஒரு வேளை  அவன் அப்பாவோட கிளினிக் இருந்தா அதை பெரிய ஹாஸ்பிடலா மாத்தி ஆகணும்னு  கட்டாயம் இருக்கலாம். ஆனா நடுத்தர குடும்பத்தில் இருந்து டாக்டர்க்கு படிக்கிறவங்க மனசு வைச்சா வரலாம். அவங்களையும் நாங்க சும்மா வந்து மருத்துவம் பார்க்க சொல்லலை. அவங்களுக்கு சம்பளம் உண்டு. Consultation Fees கூட உண்டு.  என்ன அவங்க பார்க்கிற Patients List-ல  "C" பிரிவுன்னு சொல்ற பொருளாதார ரீதியா வசதி குறைஞ்சவங்களுக்கு, அவங்க மாதத்தில் ஒரு 5 பேருக்கு Consultation Fees வாங்காம மருத்துவ ஆலோசனை சொன்னா நல்லா இருக்கும்.  

ஏன் இப்படி தனியார் மருத்துவமனைகளுக்கு போனால் அதிக செலவாகுது?

சொல்றேன், நான் படிச்ச காலகட்டத்தில் 50 வருடங்கள் முன்னாடி Term Fees - 400 ரூபாய், Mess  - 50 ரூபாய், அதிகபட்சம் 6 Yearsக்கு - 60000 செலவாகி இருக்கும். ஆனா இப்போ ஒரு சின்ன கணக்கு சொல்றேன்,  MBBS படிக்க 1 கோடி,  மேலே  என்னை மாதிரி அனஸ்தீசியா படிக்க 2 கோடி, hospital வைக்கணும்னா ஒரு 4 கோடி, நிலத்துக்கு 5 கோடி, மொத்தம் 12 கோடி ஆகுதுன்னு பார்த்தாலும், இதுக்குக் கடன் வாங்கிருந்தா பேங்க்ல ஒரு மாசத்துக்கு Interest  12 இலட்சம் ஆகும். அதை வச்சு பார்த்தா ஒரு நாளைக்குக் குறைஞ்சது 40,000லிருந்து 50,000 வரை அவன் சார்ஜ் பண்ணுவான். இதான் இப்ப நடக்குது. என்ன, கடன் வாங்கி படிச்சவன் கடன் தீர்ந்து விட்டாலும் மேலும் மேலும் சம்பாதிக்க ஆசைப்படறான் இல்லியா? அது தான் பிரச்சினை ஆகுது.

நமக்குத் தான்  போதுமான அளவில் எல்லாம் கிடைத்து விட்டாலும் போதாது, போதாதுனு யோசிக்கிறோமே அது தான் தப்பு. இப்பிடியே போனா Where is end? வேற ஒண்ணும் இல்லை, படிப்பு என்பது அறிதலுக்கும், மத்தவங்களுக்கு பயன்படுறதுக்கும் என்பது இல்லாம போய் பணம் சம்பாதிக்கணும் என்ற நிலைக்கு வந்து ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு.  டாக்டர்ஸ் கொஞ்சம் மாத்தி யோசிக்கணும். பணத்தை வச்சு எல்லாம் பண்ண முடியாது.

பிறகு இதுக்கு என்ன தான் வழி? மக்கள் என்ன பண்ணுவாங்க?

டாக்டர்களை மட்டும் குறை சொல்லி பிரயோசனம் இல்லை.  நீங்க என்ன பண்ணிங்க? அதை முதலில் சொல்லுங்க! அவங்களை தப்பு சொல்றதுக்கு முன்னாடி உங்க கடமையை பற்றி யோசிங்க! ஒரு உதாரணமா சொல்றேன்! இப்ப உங்களுக்கு மாசத்துக்கு 1 இலட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்குதுனு வச்சுப்போம். அதில் ஒரு 25,000 ரூபாய் எடுத்து வைங்க, மாசத்துக்கு 25,000னு பார்த்தா கூட 2 வருடத்தில் 6 இலட்சம் ஆச்சே! இப்படி 20 பேர்கள் சேர்ந்தாலே சேவை மனப்பான்மையோடு ஒரு hospital-ஐ உங்க ஊரில் ஆரம்பிச்சிடலாமே!பின்ன ஏன் அப்படி செய்யலை?

-தொடரும்-

Tuesday, August 18, 2015

ஒரு கேள்வி! "ஓதாமல் உணர்ந்தோர்" என்பது சரியா?

"கண்ணோ! கருங்கயலோ! உண்ணுங்கூற்றோ! ஒளிவேலோ! உணர்கலேனாற்!"


இது பாடல் வரி!

விளக்கம்: பெண்ணே! உன் கண்கள்  கருமையான நிறம் கொண்ட அங்கும் இங்கும் சுற்றி வரும் மீன்களோ! இல்லை! என் உயிரைக் கொண்டு செல்ல வந்திருக்கும் கூற்றோ! அதுவும் இல்லை என்றால் விரைவாக என் நெஞ்சில் பாயும் ஒளி பொருந்திய வேலோ! 

எப்படிப்பட்ட  நுண்ணுணர்வான காதல் நோயின் உச்சத்தை வெளிபடுத்தும் வரிகள்! படிக்கும்போதே படிப்பவர் மனதில் எண்ணங்கள் வர்ண ஜாலம் புரிந்து புது புது ஓவியங்கள் விளைகின்றனவே! கட்டாயம் இது ஒரு காதல் வயப்பட்ட ஒரு இளைஞன் பாடியது என்று தானே நினைக்கிறீர்கள்! நானும் அப்படித் தான் நினைத்தேன்!

ஆனால் அப்படி இல்லை! பாடியது ஒரு துறவி!  நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், அந்த துறவி இன்றைய காலகட்டத்தில் உள்ள சில போலித் துறவிகள் போல ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களோடு வளைய வந்த துறவி  அல்ல. உண்மையிலேயே முற்றும் துறந்தவர்! சமணத் துறவி!

சமணர்களால் இன்ப நெறி காட்டும் இலக்கியங்கள் படைக்க முடியாது என்று சவால் விடப்பட்டபோது அவர்களாலும் முடியும் என்று அவர் உருவாக்கிய காப்பியத்தில் விளைந்ததே மேலே உள்ள பாடல் வரிகள்.  அவர் பாடி முடித்த பிறகு "நீ! உண்மையான துறவி தானா? அதை நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டபோது  பழுக்கக் காய்ச்சிய கம்பியைத் தன் இரு கைகளால் வாங்கிக் கொண்டார் என்றும் அவரது கைகளுக்கு எந்தவிதமான  பாதிப்புமே நடக்கவில்லை என்றும் அதன்மூலம் அவரின் புனிதம் நிருபிக்கப்பட்டது என்றும் கூறுவர். அந்தத் துறவியின் பெயர் திருத்தக்கத்தேவர், அவர் பாடிய காப்பியம் "சீவகசிந்தாமணி".

என் கேள்வி! இது தான், ஒருவர் ஒன்றை அனுபவித்து அறியாமலே அதைப் பற்றி பாட முடியுமா? அது காதல் ஆகட்டும், வீரம் ஆகட்டும், இல்லை வேறு எந்த ஒரு நிலை கூட இருக்கலாம், ஆனால் "அனுபவிக்காமல் அறிதலோ, ஓதாமல் உணர்வதோ நடக்குமா?"

Monday, August 17, 2015

திருப்பரங்குன்றம் பதிவுகள்

திரு+ பரம் + குன்றம் = திருப்பரங்குன்றம் என்றானது. பரம் உறையும் குன்று. கதிர்வேல் செங்கோடன் முருகனது படைவீடுகளில் முதல் படைவீடு. அடிவாரத்தில் முருகனது திருக்கோயில், ஒருபுறம் உமையாண்டாள் குடவரைக்கோயில், மலையின் பல பகுதிகளில் அமணர் பள்ளிகள், இன்னொருபுறம் காசிவிசுவநாதர் ஆலயம் (முருகன் கை வேலால் உண்டான சுனை உள்ள இடம்), அருகே இஸ்லாமிய நண்பர்கள் வழிபடும் ஐயா சிக்கந்தர் பாஷா ரஷீத் அவர்களின் தர்கா என பல சமயப் பொறை நிலவும் மலை.

மறக்கமுடியாத  தலம். அக்டோபர் 2012 இறுதியில் அங்கு நண்பர் செந்தில்குமார்(அண்ணா சிலிகான் டெக்னாலஜி) அவர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  அப்பொழுது அங்கு கேட்ட ஒரு சொற்றொடர்  " முருகனே! சிலம்பனே!"  தமிழ் இறையே போர்வீரனாக வழிபடப்படும் மரபு நிலவுவதை அதன் மூலம் காணலாம். அந்த சொல்லைப் பிடித்து செல்லும்போது  தமிழ் தற்காப்பு கலைகள்  வரையில் கொண்டு சென்றது. அது என்னைக் கொண்டு சென்று நிறுத்திய இடங்கள் அருகே இருந்த கிராமங்கள் இரண்டு, ஒன்று விளாச்சேரி, மற்றொரு இடம் மாடகுளம்,  அங்கு கண்ட கேட்ட சம்பவங்களை வரும் வாரங்களில் படிப்படியாகக் காணலாம்.  முதலில்  அங்கு எடுத்த புகைப்படங்களை  நண்பர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்: